மாணவர்களுக்கு அரசால் வழங்கப்பட்ட விலையில்லா ‘2 ஜி.பி. டேட்டா கார்டு'களை புதுப்பித்து வழங்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

மாணவர்களுக்கு அரசால் வழங்கப்பட்ட விலையில்லா ‘2 ஜி.பி. டேட்டா’ கார்டுகளை புதுப்பித்து வழங்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு அரசால் வழங்கப்பட்ட விலையில்லா ‘2 ஜி.பி. டேட்டா கார்டு'களை புதுப்பித்து வழங்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
Published on

சென்னை,

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய டுவிட்டர்' பதிவில் கூறி இருப்பதாவது:-

இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா?என முதல்-அமைச்சரை நேரடியாகவும், ஊடகங்கள் மூலமும் பலமுறை வலியுறுத்தியும் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தியதின் விளைவு; இன்று மாணவர்களின் மருத்துவக்கனவு கேள்விக்குறியாகி உள்ளது.

எப்போதும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத இந்த அரசு, ஜெயலலிதா அரசு செயல்படுத்திய நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத இடஒதுக்கீடு கிடைக்க பெறுவதில் இடையூறு ஏற்படுத்தாமல், தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஜெயலலிதா அரசு அளித்தது போல உரிய பயிற்சிகள் வழங்கி உறுதுணையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

இதேபோல், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக, தமிழக கல்லூரிகளில் வகுப்புகளை நடத்த முடியாத சூழ்நிலையில், மாணவர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் இணையவழி (ஆன்லைன்) வகுப்புகளை நடத்தின.

ஜெயலலிதா அரசு, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதிக்கல்லூரிகளில் பயின்ற சுமார் 9 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 4 மாதங்களுக்கு நாள் ஒன்றுக்கு 2 ஜி.பி. டேட்டாவுடன் கூடிய தரவு அட்டைகளை (டேட்டா கார்டு) வழங்க உத்தரவிட்டது.

கல்வி நிறுவனங்கள் தற்போது செயல்படவில்லை என்றாலும், மாணவர்களில் சிலர் இந்த ஆண்டுக்கான பாடங்களை இணையவழி, இணையவழி நூலகம், கூகுள் சர்ச் போன்ற முறைகளில் தரவிறக்கம் செய்து பயின்று வருகிறார்கள்.

ஜெயலலிதாவின் அரசால் வழங்கப்பட்ட விலையில்லா தரவு அட்டைகள் இந்த ஆட்சி வந்த பிறகு புதுப்பிக்கப்படாததால், அனைத்து மாணவர்களும் இணையவழியில் பாடம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக செய்திகள் வருகின்றன.

எனவே, நமது மாணவர்கள் தொடர்ந்து சிறந்த முறையில் கல்வி கற்கவும், அவர்களுடைய கற்றல் திறனை மேம்படுத்தவும், தி.மு.க. அரசு ஏற்கனவே ஜெயலலிதா அரசால் வழங்கப்பட்ட விலையில்லா 2 ஜி.பி. தரவு அட்டைகளை (டேட்டா கார்டுகளை) புதுப்பித்தும், இந்த ஆண்டு புதிதாக சேரும் மாணவர்களுக்கு புதிய அட்டைகளையும் வழங்கவேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com