பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் திமுக மனு

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக ஐகோர்ட்டில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் திமுக மனு
Published on

சென்னை

சமூக அடிப்படையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கும், இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்நிலையில், முற்படுத்தப்பட்ட சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு சட்டமியற்றியுள்ளது.

இதன்படி, பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். இந்த முறையில், பொருளாதார அடிப்படையில் நலிந்த பிரிவினர் என்பதற்கான அளவுகோல் குறித்தும், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்தும் சர்ச்சைகள் எழுந்தன.

இதற்கான மசோதாவை தொடக்க நிலையிலேயே மாநிலங்களவையில் திமுக எதிர்த்தது. இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல என்றும், பொதுப்பிரிவினருக்கு பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது இயற்கை நீதிக்கும் அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது.

இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டால், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கும், இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது பாதிக்கப்படும்.

தமிழகத்தில் ஏற்கெனவே 69 சதவீத இடஒதுக்கீடு உள்ள நிலையில், மேலும் 10 சதவீதம் என்பது இடஒதுக்கீட்டின் அளவை 79 சதவீதம் ஆக மாற்றிவிடும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த புதிய, பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து, அதற்கான சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com