

சென்னை,
நபார்டு வங்கி நடத்தும் 2019-20-ம் ஆண்டிற்கான மாநில வங்கி கடன் நிதி கருத்தரங்கு, உழவர் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரை வருமாறு:-
தமிழ்நாட்டில் இரண்டாம் பசுமை புரட்சி ஏற்படுத்த அரசு எடுத்த நடவடிக்கையின் விளைவாக 2011-12 முதல் 2017-18-ம் ஆண்டு வரையிலான காலத்தில் உணவு தானிய உற்பத்தி 100 லட்சம் மெட்ரிக் டன்னை 5 முறை கடந்து சாதனை படைத்தது. அதற்காக மத்திய அரசின் கிரிஷி கர்மான் விருதை தமிழ்நாடு அரசு 4 முறை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, 2016-17-ம் ஆண்டில் அதிக காப்பீட்டு இழப்பீட்டுத்தொகை பெற்றதில் தமிழ்நாடு முதலிடம் பெற்றது.
உணவு பூங்காக்கள் 10 மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டங்களின் மூலம் விவசாய உற்பத்தி அதிகரிப்பதுடன், விவசாயிகளின் வருமானமும் இருமடங்காக அதிகரிப்பதற்கு வழிவகை செய்யப்படுகிறது.
நபார்டு வங்கியின் மாநில வங்கிக்கடன் கருத்தரங்கில் 2019-20-ம் ஆண்டில், தமிழ்நாட்டு மக்களுக்கு ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 900 கோடி வங்கிக்கடன் வழங்குவதற்கான திட்ட கையேட்டை வெளியிட்டுள்ளேன். இத்தொகையில் ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் கோடியை விவசாயிகளுக்காகவும், வேளாண் சார்ந்த தொழில்களுக்காகவும் ஒதுக்கியிருப்பதன் மூலம் ஒரு விவசாயி என்ற முறையில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு முறை உபயோகித்து தூக்கி எறியக்கூடிய 14 பிளாஸ்டிக் பொருட்களை தமிழ்நாடு அரசு தடை செய்துள்ளது. இதனால் பொதுமக்களிடையே மாற்று பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
இந்த மாற்றுப்பொருட்களை அதிக அளவில் தயாரிக்க மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் தாராளமாக கடனுதவி வழங்க வேண்டும். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்த தொழில் நிறுவனங்களுக்கு, வேறு தொழில்கள் தொடங்குவதற்கும் கடனுதவி அளிக்க வேண்டும்.
இந்த ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள 2 லட்சத்து 72 ஆயிரம் சுய உதவிக்குழுக்களுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாயை, அதாவது கடந்த ஆண்டைவிட இரு மடங்கு கடன் வழங்க வங்கிகள் திட்டமிட்டிருப்பது, ஏழை பெண்களின் வாழ்வை ஒளிர செய்யும். மேலும், தமிழ்நாட்டில் வெண்மைப் புரட்சி ஏற்படுத்த 5 மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.500 கோடி கடன் உதவியை தேசிய பால் வளர்ச்சி கழகத்தின் மூலம் நபார்டு வங்கி வழங்க உள்ளது.
வேளாண் உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்களின் நடவடிக்கைகளை நவீனப்படுத்த மின்னணு கொள்முதல் மற்றும் நவீன சேமிப்பு கிடங்குகள் அமைக்க ரூ.468 கோடி அளவில் இந்த ஆண்டு நபார்டு வங்கி கடனுதவி அளித்துள்ளது.
தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தன் பணிகளை நவீன தொழில்நுட்பங்களை கொண்டு கையாள்வதற்கான விருதை பெறுவதில் மகிழ்ச்சி.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரை ஆற்றினார். உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் கே.சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் பத்மா ரகுநாதன், நபார்டு வங்கி பொது மேலாளர் டி.ரமேஷ், இந்திய ரிசர்வ் வங்கி தலைமை பொது மேலாளர் கே.பாலு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் ஆர்.சுப்பிரமணிய குமார், இந்தியன் வங்கி செயல் இயக்குனர் எம்.கே.பட்டாச்சார்யா, நபார்டு வங்கி சென்னை துணை பொது மேலாளர் வி.மஷார், சென்னை நபார்டு வங்கி பொது மேலாளர் எஸ்.விஜயலட்சுமி, பல்லவன் கிராம வங்கி தலைவர் தன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.