பொருளாதார துறைக்கான நோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

பொருளாதார துறைக்கான நோபல் பரிசு பெறும் அபிஜித் பானர்ஜிக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
பொருளாதார துறைக்கான நோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
Published on

சென்னை,

பொருளாதார துறைக்கான நோபல் பரிசு அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டப்லோ உள்ளிட்ட 3 பேருக்கு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

வறுமையை ஒழிப்பதற்கான பொருளாதார திட்டங்களை வகுத்தமைக்காக அபிஜித் பானர்ஜிக்கும், அவரது மனைவி எஸ்தர் டப்லோக்கும் 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு கிடைத்ததற்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவில் பிறந்த சர்வதேச பொருளாதார மேதையான அபிஜித் பானர்ஜி பொருளாதார ஆராய்ச்சியாளராகவும், பேராசிரியராகவும் திறம்பட பணியாற்றி வருபவர்.

அபிஜித் பானர்ஜி மற்றும் அவருடைய மனைவி எஸ்தர் டப்லோ ஆகிய 2 பேரும் இயக்குனர்களாக உள்ள ஜே.பி.ஏ.எல். நிறுவனமும், தமிழ்நாடு அரசும் 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு, இதுவரை 7 துறைகளில் 15 ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் டப்லோ உள்பட உலக புகழ்பெற்ற பல்வேறு பொருளாதார அறிஞர்களின் கருத்துகளை பெற்று தமிழ்நாடு அரசு மக்கள் நலனுக்கான திட்டங்களை தீட்டி வருகிறது. அபிஜித் பானர்ஜி மற்றும் அவருடைய மனைவி எஸ்தர் டப்லோ ஆகிய 2 பேருக்கும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு கிடைத்ததற்கு தமிழ்நாடு மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பொருளாதார அறிவு மிக்க இந்திய அமெரிக்க பேராசிரியர் அபிஜித் பானர்ஜிக்கு நோபல் பரிசு வழங்கியிருப்பது மிகவும் பொருத்தமானதாகும்.

நோபல் பரிசு பெற்றுள்ள அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட மூவரையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

மேற்கு வங்காளத்தில் பிறந்து அமெரிக்காவில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்ற அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டப்லோ ஆகியோருக்கு, பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது.

ஏழை - எளிய மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக அருந்தொண்டு ஆற்றிவருகின்ற கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து இவ்விருதை வென்று இருப்பது அரிய நிகழ்வு. இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கின்றது. ம.தி.மு.க. சார்பில், அவர்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தனது டுவிட்டர் பதிவு மூலம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினை பெற்றிருக்கிற இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கும், அவரது மனைவி எஸ்தர் டப்லோவுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இது, ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ள செய்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com