2-வது நாளாக.. கொடைக்கானலில் பல கிலோ மீட்டருக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

தொடர் விடுமுறை என்பதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.
கொடைக்கானல்,
புகழ்பெற்ற சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறைகள் என தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.
மேல்மலை கிராம பகுதிகளான மன்னவனூர், பூம்பாறை, பூண்டி, கிளாவரை போன்ற பகுதிகளிலும் அதிகமான சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர். இதே போல் பசுமை பள்ளத்தாக்கு, வனத்துறை சுற்றுலா தளங்களான தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடு, மோயர் சதுக்கம் ஆகிய இடங்களிலும், பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, படகு இல்லங்கள் போன்ற பகுதிகளில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். ஏரிச்சாலை பகுதிகளில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக கொடைக்கானலில் 2-வது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 5 கிலோமீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்துள்ளனர். அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.






