சிவில் நீதிபதிகளுக்கான தேர்வுக்கு மனித நேய மையமும், பார் கவுன்சிலும் இணைந்து இலவச பயிற்சி - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

சிவில் நீதிபதிகளுக்கான தேர்வுக்கு மனிதநேய மையமும், பார் கவுன்சிலும் இணைந்து இலவச பயிற்சி அளிக்கிறது. இதற்கு நாளை (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி தெரிவித்தார்.
சிவில் நீதிபதிகளுக்கான தேர்வுக்கு மனித நேய மையமும், பார் கவுன்சிலும் இணைந்து இலவச பயிற்சி - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
Published on

சென்னை,

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமியை தலைமையாக கொண்டு மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.), மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற்று தமிழகத்தை சேர்ந்த அனைத்து தரப்பினரும் உயர்பதவிகளில் பணியாற்றிட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

இதுவரை 3 ஆயிரத்து 381-க்கும் மேற்பட்டோர் மத்திய, மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற்று மாநில, தேசிய அளவில் உயர் பதவிகளில் இருக்கின்றனர்.

அதேபோல் சிவில் நீதிபதிகளுக்கான தேர்வில் மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த 146 பேர் வெற்றி பெற்று சிவில் மற்றும் மாவட்ட நீதிபதிகளாக உள்ளனர்.

இந்தநிலையில் டி.என்.பி.எஸ்.சி. 176 சிவில் நீதிபதி பதவிகளுக்கான அறிவிப்பை கடந்த 9-ந் தேதி வெளியிட்டது. இதற்கான முதல்நிலை தேர்வு வருகிற நவம்பர் மாதம் 24-ந் தேதி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு(2020) மார்ச் மாதம் 28, 29-ந் தேதிகளில் முதன்மை எழுத்து தேர்வும் நடக்கிறது.

இந்த தேர்வுகளுக்கு மனிதநேய அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வரும் சைதை துரைசாமியின் மனிதநேய கட்டணமில்லா ஐ.ஏ.எஸ். கல்வியகம் மற்றும் பார் கவுன்சில்(தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) இணைந்து பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.

இந்த பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நாளை(திங்கட்கிழமை) முதல் 20-ந் தேதி வரை எண்.28, முதல் பிரதான சாலை, சி.ஐ.டி. நகர், சென்னை-35 என்ற முகவரியில் உள்ள மனிதநேயம் கட்டணமில்லா ஐ.ஏ.எஸ். கல்வியகத்துக்கு நேரிலோ, 044-24358373, 24330952 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டோ அல்லது mnt-f-r-e-e-ias.com என்ற இணையதளம் மூலமாகவோ விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

வருகிற 23-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று மாலை நேரத்தில் பார்கவுன்சில் ஆடிட்டோரியத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை மனிதநேய பயிற்சி மையத்தின் இயக்குனர் கார்த்திகேயன் செய்து வருகிறார்.

மேற்கண்ட தகவலை மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com