

சென்னை,
மருத்துவ கல்லூரி படிப்புக்கும், பல் மருத்துவக் கல்வி படிப்புக்கும் நீட் தேர்வு என்ற சமூக நீதிக்கு குழிபறிக்கும் அநீதியான திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. கிராமப்புற குடும்பத்து பிள்ளைகள், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகள் தமிழக அரசு கல்வி திட்டத்தில் பள்ளி இறுதித்தேர்வை எழுதி, மருத்துவ கல்லூரிகளில் இடம்பெற்று உலகப் புகழ்பெற்ற மருத்துவர்களாக சேவை செய்து வருகிறார்கள்.
இந்தநிலையை நிர்மூலமாக்கும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் மசோதா கொண்டு வந்தும், அந்த மசோதாவுக்கு அனுமதி கொடுக்க மத்தியில் ஆளும் மோடி அரசு ஏற்பாடு செய்யவே இல்லை. இந்தநிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வகையில், தமிழக மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதுவதற்கு கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இதற்கு தடை விதித்தபோது, மத்திய அரசு அதனை ஏற்காமல் உச்சநீதிமன்றத்தை அணுகி தடையை நீக்கியது. இதனால் 5,600 மாணவ-மாணவிகள் கேரளத்திலும், ராஜஸ்தானிலும் தேர்வு எழுதச் சென்று விவரிக்க இயலாத இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். தங்குவதற்கு இடம் கிடைக்காமல், உணவு கிடைக்காமல் அல்லல்பட்டனர்.
தமிழக மாணவ-மாணவிகள் சொந்த நாடு என்று சொல்லப்படும் இந்தியாவிலேயே அகதிகளாக, அநாதைகளாக மத்திய அரசால் ஆக்கப்படுகிறார்களா? என்ற கேள்விதான் முன் நிற்கிறது. தமிழக மாணவிகள் நீட் தேர்வு மையங்களுக்குச் சென்றபோது, சோதனை என்ற பெயரால் அவர்களது மேலாடைகளையும் சோதனையிடுகிறோம் என்று அலங்கோலப்படுத்திய அக்கிரமம் சகிக்க முடியாதது; மன்னிக்க முடியாதது. இத்தகைய மனவேதனையுடன் மாணவர்கள் எப்படி தேர்வு எழுத முடியும்? இவ்வாறு அவர் கூறியுள்ளார். புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
நீட் தேர்வு மையங்களில் தீவிரவாதிகளை போல் மாணவர்களிடம் சோதனைகளை அதிகாரிகள் மேற்கொள்வது கடுமையான மனித உரிமை மீறலாகும். தமிழக மாணவர்களை இவ்வாறு சித்திரவதை செய்வதன் மூலம் அவர்களுக்கு கடுமையான உளைச்சலை ஏற்படுத்தி, சரியாக தேர்வு எழுத முடியாத சூழ்நிலையை உருவாக்குகின்றனர்.
வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் ஏற்படாதபடி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். தேவையற்ற சோதனைகள் என்ற பெயரில் மனித உரிமை மீறலில் ஈடுபடுவதை இதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். தமிழகத்துக்கு அடுத்த கல்வி ஆண்டில் இருந்து நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர பிரிவு மாணவர்களின் வாழ்வில் பிரதமர் நரேந்திர மோடி ஒளி விளக்கேற்றி வைக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.