

காஞ்சீபுரம்
காஞ்சீபுரத்தில் அத்திவரதர் உற்சவத்தின் 24-ம் நாளான இன்று, மஞ்சள் நிறப் பட்டாடை அலங்காரத்தில் அத்திவரதர் அருள்பாலித்து வருகிறார். அதிகாலை முதலே திரளான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.
நேற்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்திருந்த நிலையில் கடந்த இருபத்தி மூன்று நாட்களாக 31 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். ஆகம விதிப்படி அவர் நாளை முதல் நின்ற நிலையில் தரிசனம் தருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நின்ற நிலையில் தரிசனம் தர உள்ளார்.
நேற்று இரவு 7 மணி அளவில் காஞ்சீபுரம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அத்திவரதரை தரிசனம் செய்தார். கோவில் பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கிய முதலமைச்சர், பின்னர் பக்தர்களுடன் சேர்ந்து அதை சாப்பிட்டார். தொடர்ந்து பக்தர்கள், சிரமமில்லாமல் வந்து செல்ல செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். பின்னர் அடுத்தடுத்த நாட்களில் பக்தர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்தார்.
இந்நிலையில், காஞ்சீபுரம் அத்திவரதர் தரிசனத்திற்கு மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வழங்கக் கோரி வழக்கறிஞர் ரமேஷ் ஐகோர்ட்டில் முறையீடு செய்து உள்ளார். பாதுகாப்பை அதிகரிக்கக் கோரி ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குடன் சேர்த்து விசாரிப்பதாக நீதிபதிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.