அரிய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.9 கோடி நிதி உதவி - மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

‘லைசோசோமால் ஸ்டோரேஜ் டிசார்டர்’ என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 11 பேரின் சிகிச்சைக்காக மத்திய, மாநில அரசுகள் ரூ.9.4 கோடி வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அரிய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.9 கோடி நிதி உதவி - மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

டெல்லியைச் சேர்ந்த லைசோசோமால் ஸ்டோரேஜ் டிசார்டர் சப்போர்ட் சொசைட்டி என்ற அமைப்பு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

லைசோசோமால் ஸ்டோரேஜ் டிசார்டர் என்பது மரபுரீதியான வளர்சிதை மாற்ற நோய்களாகும். உடலில் சுரக்கும் அமிலங்களில் கழிவுகள் ஏற்பட்டு முக்கிய பாகங்களில் தேங்கும் ஒருவிதமான பிரச்சினை ஆகும். இந்த அரிய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 45 விதமான நோய்கள் வரும். எலும்பு, மூளை, நரம்பு மண்டலம், தோல் போன்ற முக்கிய பகுதிகள் பாதிக்கப்பட்டு முடிவில் இறப்பு ஏற்படும். இந்த 45 விதமான நோய்களில் 6 நோய்களுக்கு மட்டுமே மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த மருந்துகளை பெருந்தொகை செலவு செய்து வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யவேண்டும். சாதாரண மக்களால் இந்த மருந்தை வாங்க முடியாது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. தமிழகத்தில் தற்போது 132 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு ஏற்கனவே ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, சமீபகாலமாக இந்த நோய் அதிகரித்து வருவதாக தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள 132 பேருக்கு ஆண்டுக்கு ரூ.66 கோடி மருத்துவ செலவாகிறது. தொடர் சிகிச்சை வழங்க ரூ.700 கோடி நிதி வேண்டும். அதனால், இந்த நோயை சித்தா, ஆயுர்வேதா, யுனானி என்று இயற்கை மருத்துவ முறைகள் மூலம் குணப்படுத்த முடியுமா? என்று ஆய்வு செய்து வருவதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல் கட்டமாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட 11 பேரின் சிகிச்சைக்கு மத்திய அரசு ரூ.4.4 கோடியும், தமிழக அரசு ரூ.5 கோடியும் வழங்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com