போக்குவரத்து விதிமீறல்களுக்காக ‘ஆன்லைன்’ மூலம் நீதிமன்றங்களில் அபராதம் செலுத்தும் வசதி - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இன்று தொடங்கி வைக்கிறார்

போக்குவரத்து விதிமீறல்களுக்காக சென்னையில் ‘ஆன்லைன்’ மூலம் நீதிமன்றங்களில் அபராதம் செலுத்தும் வசதியை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இன்று தொடங்கிவைக்கிறார்.
போக்குவரத்து விதிமீறல்களுக்காக ‘ஆன்லைன்’ மூலம் நீதிமன்றங்களில் அபராதம் செலுத்தும் வசதி - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இன்று தொடங்கி வைக்கிறார்
Published on

சென்னை,

ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டுதல், அதிகவேகமாக வாகனத்தை ஓட்டுதல், சிக்னலில் நிற்காமல் செல்லுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு போலீசார் அபராதம் விதிப்பார்கள். இந்த அபராத தொகையை போக்குவரத்து போலீசாரிடமும் செலுத்தலாம். அல்லது சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளிலும் செலுத்தலாம்.

இவ்வாறு கோர்ட்டுகளில் அபராதம் செலுத்த வேலை நாட்களில் தான் ஒருவர் வரவேண்டியதுள்ளது. எனவே, இந்த அபராதத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி உருவாக்கப்பட்டது.

விர்சுவல் கோர்ட்ஸ் என்று அழைக்கப்படும் இந்த முறை நம் நாட்டிலேயே டெல்லியில் முதலில் தொடங்கப்பட்டது. அதை தொடர்ந்து சென்னையில் இந்த வசதி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கப்படுகிறது. இதை, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சந்திரசூட் டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார்.

நீதிபதிகள் கமிட்டி

இந்த ஆன்லைன் அபராதம் செலுத்தும் நடைமுறையை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி டி.எஸ்.சிவஞானத்தை தலைவராகவும், நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, எம்.சுந்தர், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, சி.சரவணன் ஆகியோர் உறுப்பினர்களாக கொண்ட ஐகோர்ட்டு கம்ப்யூட்டர் கமிட்டி உருவாக்கியுள்ளது.

சென்னையில் போக்குவரத்து போலீசார் கடந்த சில மாதங்களாக இ-செல்லான் முறையில் போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் வசூலிக்கின்றனர். இதனால், விர்சுவல் கோர்ட்ஸ் வசதியை சென்னையில் முதலில் ஐகோர்ட்டு கம்ப்யூட்டர் கமிட்டி தொடங்கியுள்ளது. இதன்பின்னர் படிப்படியாக தமிழகம் முழுவதும் இந்த முறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறையின்படி, போலீசார் தரும் இ-செல்லான், விதிமீறலில் ஈடுபட்டவரின் செல்போன் நம்பர், வாகன பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை விர்சுவல் கோர்ட்ஸ் இணையதளத்தில் பதிவிட்டு, நீதிமன்றம் விதித்துள்ள அபராத தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். ஒருவேளை அபராதத் தொகையை செலுத்த விரும்பாதவர்கள், வக்கீல் வைத்து வழக்கை எதிர்கொள்ளவும் உரிமை உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com