அன்னிய செலாவணி மோசடி டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரன் மீது இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
அன்னிய செலாவணி மோசடி டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு
Published on

சென்னை,

ஜெ.ஜெ. டி.வி. என்ற பெயரில் செயல்பட்ட தொலைக் காட்சி நிறுவனத்திற்கு ஒளிபரப்பு கருவிகள் வாங்கியதில் அன்னிய செலாவணி முறைகேடு நடந்ததாக அமலாக்கப் பிரிவு சார்பில் டி.டி.வி.தினகரன் மீது ஒரு வழக்கு தொடரப்பட்டது.

மேலும் பரணி பீச் ரிசார்ட் என்ற நிறுவனத்தின் பெயரில் மயிலாப்பூரில் உள்ள ஒரு வங்கியில் ரூ.3 கோடி கடன் பெறப்பட்டது. இந்த கடன்தொகையில் ரூ.2.5 கோடி கோடநாடு எஸ்டேட் வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

வங்கியில் கடன்பெற்ற ரூ.3 கோடியும் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் டாலர் நோட்டுகள் மூலம் திருப்பி செலுத்தப்பட்டது. இதிலும் அன்னிய செலாவணி மோசடி நடந்ததாக டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கப் பிரிவு இன்னொரு வழக்கும் தொடர்ந்தது. இந்த இரண்டு வழக்குகளும் எழும்பூர் 2வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை எதிர்த்து அமலாக்கப் பிரிவு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் டி.டி.வி.தினகரன் மீதான இரண்டு அன்னிய செலாவணி மோசடி வழக்குகளையும் தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று எழும்பூர் 2வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.

20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிற இந்த வழக்குகள் மீண்டும் எழும்பூர் 2வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் நடந்து வருகிறது. இன்று அவர் கோர்ட்டில் நேரில் ஆஜரானார். அவர் மீது கோர்ட்டில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தன் மீதான குற்றச்சாட்டுகளை தினகரன் மறுத்துள்ளார். இந்த வழக்கு வரும் 22ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com