வேட்டி, சேலை அணிந்து பொங்கலிட்டு கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

தூத்துக்குடி அருகே தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
Published on

தூத்துக்குடி அருகே தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொங்கலிட்டு கொண்டாடினர்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கலன்று அதிகாலையில் கண்விழித்து, புத்தாடை அணிந்து, புதுப்பானையில் பொங்கலிட்டு இறைவனுக்கு படைத்து வழிபடுவார்கள். தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரத்தை உணர்த்தும் வகையில் கொண்டாடப்படும் இவ்விழாவை வெளிநாட்டினரும் தமிழ் மண்ணில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதற்காக சென்னையைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் 'ஆட்டோ ரிக்ஷா சேலஞ்ச' என்ற பெயரில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தமிழகத்துக்கு அழைத்து வந்தது. 16-வது ஆண்டாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து, எஸ்டோனியா, நெதர்லாந்து ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த 8 பெண்கள் உள்ளிட்ட 37 சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர். அவர்கள் 17 ஆட்டோக்களில் தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கும் சென்று பார்வையிட்டனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளே ஆட்டோக்களையும் ஓட்டிச் சென்றனர்.

பொங்கலிட்டு மகிழ்ந்தனர்

அதன்படி கடந்த 28-ந்தேதி சென்னையில் இருந்து ஆட்டோக்களில் புறப்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை, ராஜபாளையம் வழியாக தூத்துக்குடிக்கு நேற்று முன்தினம் மாலையில் வந்தனர். பின்னர் அவர்கள் நேற்று காலையில் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு சாயர்புரம் அருகே தனியார் பண்ணை தோட்டத்துக்கு சென்றனர்.

தமிழர்களின் பாரம்பரிய வேட்டி, சேலை அணிந்து வந்த வெளிநாட்டினருக்கு கிராம மக்கள் நெற்றி திலகமிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 10 மண்பானைகளில் பொங்கல் வைத்தனர். இதற்காக அவர்களே விறகு அடுப்புகளில் பனை ஓலைகளால் தீ மூட்டி, புதுப்பானைகளில் பச்சரிசி, சர்க்கரை போன்றவற்றையிட்டு பொங்கலிட்டனர். பானைகளில் பொங்கல் பொங்கி வழிந்தபோது, 'பொங்கலோ பொங்கல்' என்று மகிழ்ச்சி ததும்ப குரலெழுப்பி குலவையிட்டனர்.

உற்சாகம்

தொடர்ந்து சர்க்கரை பொங்கலை சுவைத்து மகிழ்ந்த வெளிநாட்டினர், சுவையான பொங்கலை சமைத்தவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். பின்னர் சிறுதானியம், கேழ்வரகு, கம்பு போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய உணவுகளையும் ருசித்தனர்.

இதுகுறித்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூறுகையில், ''தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரம் எங்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பொங்கல் விழாவை கொண்டாடியது வித்தியாசமான அனுபவத்துடன் உற்சாகத்தை தந்துள்ளது'' என்றனர்.

சுற்றுலா தலங்கள்

பின்னர் மாலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆட்டோக்களில் மணப்பாடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்டனர். முன்னதாக எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபம், தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று பார்வையிட்டனர்.

இரவில் தூத்துக்குடியில் தங்கிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இன்று (வியாழக்கிழமை) கன்னியாகுமரிக்கு செல்கின்றனர். நாளை (வெள்ளிகிழமை) கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் சென்று தங்களது பயணத்தை நிறைவு செய்கின்றனர். பின்னர் தங்களது நாடுகளுக்கு திரும்புகின்றனர்.

-----

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com