தமிழகத்தில் மீண்டும் பணியாற்றுவதற்கு வெளிமாநில தொழிலாளர்களுக்கு அனுமதி - வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டது

தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் வந்து பணியாற்றுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டு இருக்கிறது.
தமிழகத்தில் மீண்டும் பணியாற்றுவதற்கு வெளிமாநில தொழிலாளர்களுக்கு அனுமதி - வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டது
Published on

சென்னை,

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் தனது கொடிய கரத்தை பரப்பியதால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதனால் நாடு முழுவதும் உற்பத்தி, உள்கட்டமைப்பு, வினியோகம் என அனைத்து தொழில்துறைகளும் ஒரே நாளில் முடங்கின. தொழில்துறை சங்கிலி அடியோடு சீர்குலைந்ததுடன், தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் முடங்கியது.

இந்த ஊரடங்கால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். தங்களின் சொந்த மாநிலத்தை விட்டு வெளி மாநிலங்களில் வேலைக்கு சென்று, ஊரடங்கால் முடங்கிய அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சிறப்பு ரெயில்கள் மூலமும், வேறு பல வழிகளிலும் தங்கள் சொந்த ஊர் போய் சேர்ந்தனர்.

தமிழ்நாட்டிலும் கொரோனாவுக்கு முன் லட்சக்கணக் கான புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். பீகார், அசாம், உத்தரபிரதேசம், ஜார்கண்ட் என பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்த அவர்கள் தமிழகத்தின் நகர்ப்புறங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் பல்வேறு தொழில் களை செய்து வந்தனர்.

இதில் சுமார் 3 லட்சத்துக் கும் அதிகமான வெளிமாநில தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக தங்கள் சொந்த மாநிலம் திரும்பினர். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அவர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறி இருந்தனர்.

ஊரடங்கு அமல்படுத்தி 4 மாதங்கள் கடந்திருக்கும் நிலையில், சொந்த ஊர் திரும்பிய வட மாநில தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு சொந்த மாநிலத்திலும் போதுமான வருவாயை ஈட்ட முடியவில்லை. எனவே அவர்கள் மீண்டும் தமிழகத்துக்கு திரும்ப விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

அதேநேரம் ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்படுவதால் தமிழகத்தில் அவர்கள் பணியாற்றிய நிறுவனங்களும் படிப்படியாக ஊழியர்களை பணிக்கு அமர்த்தி வருகின்றன. ஏற்கனவே தங்களிடம் வேலைபார்த்து வந்த வட மாநில தொழிலாளர்களையும் மீண்டும் அழைத்து வர தமிழக நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து உள்ளன.

இதைத்தொடர்ந்து அந்த நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் வெளி மாநில தொழிலாளர்களை அனுமதிக்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு நேற்று அனுமதி அளித்து உள்ளது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டது.

அதன்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா ஊரடங்குக்கு முன் தமிழகத்தின் பல்வேறு துறைகள் மற்றும் சேவை துறைகளில் வெளிமாநில தொழிலாளர்கள் சில லட்சம் பேர் பணியாற்றி வந்தனர். பின்னர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டவுடன் இவர்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்த ஊர் திரும்பினர்.

மத்திய அரசு நாடு முழுவதும் தற்போது ஊரடங்கில் தளர்வு நடவடிக்கைகள் அறிவித்து வருவதால் தமிழகத்தில் தொழில்துறை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் உயிர்ப்பிக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கிடையே வெளிமாநில தொழிலாளர்களை (கெஸ்ட் ஒர்க்கர்ஸ்) அனுமதிப்பது தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் மற்றும் மனிதவள ஏஜென்சிகளிடம் இருந்து அரசுக்கு ஏராளமான கோரிக்கைகள் வந்தன. எனவே வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வருவது தொடர்பாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அரசுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அளித்து உள்ளது.

அதன்படி வெளிமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அரசு கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுகிறது.

* தொழிலாளர்களை கம்பெனி அல்லது மனிதவள ஏஜென்சியின் சொந்த செலவில் பஸ் அல்லது வேன் மூலம் அழைத்து வர வேண்டும்.

* வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வர விரும்பும் நிறுவனம் அல்லது மனிதவள ஏஜென்சிகள், அந்த தொழிலாளர்களின் பெயர், வீட்டு முகவரி, ஆதார் எண், செல்போன் எண், பணியிடத்தின் முகவரி, வாகனத்தின் விவரங்கள், தனிமைப்படுத்தும் இடம் உள்ளிட்டவற்றுடன் மாவட்ட கலெக்டர் மூலம் இ-பாஸ் பெற வேண்டும்.

* இந்த விவரங்களை பரிசீலித்து மாவட்ட கலெக்டர் ஆன்லைன் மூலம் அனுமதி வழங்க வேண்டும்.

* பஸ் அல்லது வாகனத்தில் ஏறும் முன் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தெர்மல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

* தமிழகத்துக்குள் வந்ததும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கம்பெனி அல்லது ஏஜென்சியின் சொந்த செலவில் கொரோனா பரிசோதனை (ஆர்.டி.பி.சி.ஆர்.) செய்ய வேண்டும். இதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் தொழிலாளர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டும். தொற்று இல்லாதவர்களை மாவட்ட நிர்வாகத்தால் ஒப்புதல் பெறப்பட்ட தகுந்த இடத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்.

* இந்த தனிமைப்படுத்தப்பட்ட நாட்களிலும் யாருக்காவது கொரோனா அறிகுறி தென்பட்டால் அவர்களுக்கு நிச்சயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

* 14 நாட்கள் தனிமை முடித்தபின் கொரோனா அறிகுறி இல்லாதவர்களை வேலைக்கு அமர்த்தலாம். பணியிடத்தில் சோப் மூலம் கைகழுவுதல், முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பணியிடத்தில் ஒவ்வொரு நாளும் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

* தொழிலாளர்களுக்கு அவர்களது உடல்நலன் பற்றி அவர்களுக்கு தெரிந்த மொழியில் கம்பெனி அல்லது முகமையால் அறிவுரை வழங்கப்பட வேண்டும்.

* தொழிலாளர்கள் தங்கும் இடத்தில் காற்றோட்ட வசதி, சுகாதாரம் பேணப்படவேண்டும். மேலும் தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் சுகாதாரம் குறித்து அடிக்கடி அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com