தூத்துக்குடியில் காட்டுத்தீ: தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்ப்பு

தூத்துக்குடி மறவன்மடம் அருகே உள்ள காலி நிலங்களில் வளர்ந்திருந்த முள்செடிகள் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கின.
தூத்துக்குடியில் காட்டுத்தீ: தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்ப்பு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மறவன்மடம் அருகே உள்ள காலி நிலங்களில் வளர்ந்திருந்த முள்செடிகள் நேற்று திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கின. இதுகுறித்து சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சிப்காட் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில், ஏட்டு இசக்கிராஜன், ஓட்டுநர் மணிகண்டன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் முத்துஜெயக்குமார், சாமுவேல் ஆகியோர் தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்னறனர்.

வெயிலின் தாக்கம் மற்றும் பலத்த காற்று காரணமாக தீ மளமளவென பரவி, பல ஏக்கர் நிலங்களை சூழ்ந்தது. தீ எரிந்த பகுதிக்கு அருகிலேயே பெட்ரோல் விற்பனை நிலையம் மற்றும் மர யார்டுகள் இருந்ததால் பெரும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவானது.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாக தனியார் ஜே.சி.பி. எந்திரத்தை வரவழைத்தனர். ஜே.சி.பி. மூலம் எரியாத முள்செடிகளை அப்புறப்படுத்தி தீ மேலும் பரவாமல் தடுத்தனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டுத்தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களின் இந்த சமயோசியமான நடவடிக்கையை பொதுமக்களும், வணிக நிறுவன உரிமையாளர்களும் வெகுவாக பாராட்டினர்.

இதுகுறித்து சிப்காட் நிலைய அலுவலர் கார்த்திகேயன் பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், "கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் மற்றும் தனியார் நில உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து தங்கள் பகுதியில் உள்ள காய்ந்த முள்செடிகளை ஜே.சி.பி. மூலம் அகற்ற வேண்டும். இதன் மூலம் தீ விபத்துகளையும், பெரும் பொருள் சேதங்களையும் தவிர்க்கலாம். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், தீயணைப்புத் துறையினரின் மீட்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com