

திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கடந்த ஆண்டு காட்டெருமை ஒன்று வந்தது. அந்த காட்டெருமை வனப்பகுதியில் இருந்து தப்பி தஞ்சை, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பரக்கலாகோட்டை வழியாக முத்துப்பேட்டை பகுதிக்கு வந்து மக்களை அச்சுறுத்தியது. பின்னர் அது கோடியக்கரை வனப்பகுதிக்கு சென்று மாயமாகி விட்டது.
அதேபோல் இந்த ஆண்டும் காட்டெருமை ஒன்று முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடை பகுதியில் கடந்த 4 நாட்களாக சுற்றித்திரிகிறது. இதனை கண்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். தேவதானம், செந்தாமரைகண் வழியாக சித்தமல்லி, புத்தகரம் வந்து பின்னர் அங்கிருந்து ஜாம்புவானோடை பகுதிக்கு வந்துள்ளது. தென்னந்தோப்பில் தென்னங்கன்றுகளையும் சேதப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை வனத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அங்கு முகாமிட்டு காட்டெருமையை பிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஜாம்புவானோடை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அருணாசலம் கூறுகையில், 'இந்த பகுதியில் கடந்த 4 நாட்களாக காட்டெருமை ஒன்று சுற்றித்திரிகிறது. பார்க்கவே பயங்கரமாக உள்ள அந்த காட்டெருமை, இங்குள்ள தென்னை, சவுக்கு மரக்கன்றுகளை சேதப்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே வனத்துறை அதிகாரிகள் காட்டெருமையை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.