

திருப்பத்தூர்,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. மேலும், அரசியல் கட்சியினரும் ஒரு கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணையும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இதனிடையே, தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற அதிமுக ஆட்சி காலத்தின்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கபில். இவர் அதிமுக தலைமையுடனும், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியுடனும் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட அவர் வாய்ப்பு கேட்டும் அவருக்கு வழங்கப்படவில்லை.
தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நிலோபர் கபில் இருந்த காலத்தில், கோடிக்கணக்கில் பணம் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனை தொடர்ந்து, அதிமுகவில் அடிப்படை உறுப்பினரில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
சிறிது காலம் அமைதியாக இருந்த நிலோபர் கபில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். ஆனால், அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில், நிலோபர் கபில் இன்று திமுகவில் இணைந்தார் . திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பொன்னேரியில் திமுக வடக்கு மண்டல 47 தொகுதி வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாடு இன்று நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலோபர் கபில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.