அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனு தள்ளுபடி

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனு தள்ளுபடி
Published on

சென்னை,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது, ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் சிலர் தாக்கினர். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமார் தனக்கு ஜாமீன் கோரி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, ஜெயக்குமார் தரப்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு நேற்று காலை விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ஜாமின் மனு நகல் போலீஸ் தரப்புக்கு இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறினார். புகார்தாரர் நரேஷ் தரப்பில் ஆஜரான வக்கீல், ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறினார்.

இதையடுத்து ஜாமின் மனுவின் நகலை போலீஸ் தரப்புக்கு வழங்க ஜெயக்குமார் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் நரேஷ் தரப்பில் ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.

இந்த நிலையில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புகார்தாரர் தரப்பு வக்கீல், ஜெயக்குமார் முன்னாள் அமைச்சர் என்பதால் ஜாமின் கோரி அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய முடியாது என்று வாதிட்டார்.

அதே சமயம் ஜாமின் வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் தவிர்த்த பிற நீதிமன்றங்கள் விசாரிக்கக் கூடாது என குறிப்பிடப்படவில்லை என்றும் தாக்கப்பட்டதாக கூறப்படும் நபருக்கு எந்த காயமும் இல்லை என்றும் ஜெயக்குமார் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இதனை தொடர்ந்து தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ள முதன்மை அமர்வு நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கைதாகி சில நாட்களே ஆனதாலும், விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதாலும் ஜாமின் வழங்க முடியாது என நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com