

சென்னை,
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையும் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நாளை காலை பிரம்மாண்ட இணைப்பு விழா நடைபெறவுள்ளது. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த நான்கு சிட்டிங் எம்எல்ஏ-க்கள் தங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரும் விரைவில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதி நாளை தவெகவில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த 2016-2021 அதிமுக ஆட்சிகாலத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி வகித்து வரும் அமைப்பு செயலாளர் பதவியை பறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ். வளர்மதி (முன்னாள் அமைச்சர், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம்) இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். என தெரிவிக்கப்பட்டுள்ளது.