த.வெ.க.வில் இணைந்தார்.. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

வெல்லமண்டி நடராஜன் த.வெ.க.வில் இணைந்திருப்பது அ.தி.மு.கவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
த.வெ.க.வில் இணைந்தார்.. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
Published on

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த வெல்லமண்டி நடராஜன், அவர் (ஓ.பி.எஸ்.) திமுகவில் இணைந்த பிறகு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்து கொண்டார். அவருக்கு அங்கு அமைப்புச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், த.வெ.க. தலைவரும் தமிழ்நாடு முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய், டெல்லி பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த்தை நேரில் சந்தித்து வெல்லமண்டி நடராஜன் த.வெ.க.வில் இணைந்துள்ளார். மேலும் அவரின் மகன் ஜவஹர்லால் நேரு மற்றும் ஆதரவாளர்களும் த.வெ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் வெற்றி பெற்ற 3 வாரங்களுக்குள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்திருக்கும் சூழலில், வெல்லமண்டி நடராஜன் இணைந்திருப்பது அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற வெல்லமண்டி நடராஜன், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் நடைபெற உள்ள திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெல்லமண்டி நடராஜன், த.வெ.க. சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com