“அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கில் 15 ஆண்டாக முன்னேற்றம் இல்லை” - சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கில் 15 ஆண்டாக முன்னேற்றம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
“அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கில் 15 ஆண்டாக முன்னேற்றம் இல்லை” - சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி
Published on

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, கடந்த 2005 ஆம் ஆண்டு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் வீட்டிற்குள் வடநாட்டைச் சேர்ந்த கொள்ளை கும்பல் ஒன்று நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தி அவரை கொலை செய்ததுடன், அவரது வீட்டில் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தின் பின்னனியில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த, பவாரியா என்ற கொள்ளை கும்பல் ஈடுபட்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.

இதனை தொடர்ந்து பவாரியா கும்பல் தலைவர் ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஸ்வரா உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ஓம் பிரகாஷ் சிறையிலேயே உயிரிழந்துவிட்டார். அவரது சகோதரர் கடந்த 2005-ல் இருந்து தற்போது வரை சிறையிலேயே விசாரணை கைதியாக வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஜெகதீஸ்வரா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது 15 ஆண்டுகளாக தான் சிறையில் இருப்பதாகவும், இது தனது முதல் ஜாமீன் மனு என்றும் அவர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து 15 ஆண்டுகளாக இந்த வழக்கில் ஒரு முடிவு எட்டப்படாமல் இருப்பது குறித்து நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதம் இருப்பவர்களை கைது செய்வதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஏன் வழக்கு விசாரணையில் இவ்வளவு தாமதம் ஏற்பட்டது? என காவல்துறைக்கு நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கு தொடர்பாக வரும் ஜனவரி 18 ஆம் தேதி, இந்த வழக்கின் புலன்விசாரணை அதிகாரியான பெரியபாளையம் காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 18 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

நடிகர் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் கதைக்களம் இந்த சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com