

நீலகிரி
நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி பகுதிகளை சேர்ந்த பெண்கள் குழுவாக கடந்த 4 ஆண்டுகளாக ஊட்டச்சத்து உணவுகளை விற்று சுய தொழில் செய்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது குழுவிற்கு, கோத்தகிரி பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான ஸ்ரீராம் (வயது 48) என்பவர் அறிமுகமானார். இவருக்கு திருமணமான நிலையில், அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இந்தநிலையில் பெண்களுக்கு வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் மூலம் கடன் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி, கடன் வாங்குவதற்கு முன்கட்டண தொகையாக பலரிடமும் ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்துள்ளார். ஆனால், ஸ்ரீராம் பெண்களுக்கு கடன் வாங்கி தரவில்லை. மேலும் கட்டண தொகையையும் திருப்பி கொடுக்கவில்லை.
இதனால் ஏமாற்றம் அடைந்த பெண்கள், அவரிடம் கட்டண தொகையை திருப்பி கேட்டனர். அப்போது அவர்களுக்கு ஸ்ரீராம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மற்ற பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்க, சில பெண்களே அவருக்கு உதவியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு, சப்-இன்ஸ்பெக்டர் வசந்தகுமாரி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து. ஸ்ரீராமை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதானவரால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.