பாஜகவில் இருந்து கோவை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் கே.வசந்தராஜன் விலகல்

தோல்வி காலத்திலும் பாஜக காரன் என்று பெருமையுடன் பயணித்து வந்ததாக கே.வசந்தராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இருந்து கோவை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் கே.வசந்தராஜன் விலகல்
Published on

சென்னை,

பாஜகவில் இருந்து விலகுவதாக கோவை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் கே.வசந்தராஜன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

கனத்த இதயத்துடன் எழுதுகிறேன் 1998-ல் கிளை தலைவராக பாஜகவில் ஆரம்பித்து படிப்படியாக மாநில இளைஞரணி பொதுச்செயலாளர், மாவட்ட தலைவர், பாராளுமன்ற வேட்பாளர் வரை இந்த சாமானியளை உயர்த்தியது இந்த ஒப்பற்ற பாரதிய ஜனதா கட்சி.

அன்று முதல் இன்று வரை பூத் ஏஜென்ட், கவுண்டிங் ஏஜென்ட், வீடுதோறும் பிரசாரம், போராட்டம் பொதுக்கூட்டம் மக்கள் நல நிகழ்ச்சி, 6 மாதம் முழு நேர ஊழியர், பிணையில்லா வழக்குகள், தாமரை வரைதல், கொடி கட்டுதல், சுவரொட்டி ஒட்டுவது என்று தாமரையுடன் இருபத்தி எட்டு ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன்

இந்திய திருநாட்டை காங்கிரசின் மிக மோசமான மன்னர் ஆட்சியில் இருந்து மீட்டு தேச பாதுகாப்பு உலக மத்தியில் இந்தியாவின் மரியாதை உயர்வு, தூய்மையான வளர்ச்சியான நல்லாட்சி கொடுத்த பாரதிய ஜனதா கட்சியும் வாஜ்பாய், அத்வானி, மோடி போன்ற மாமனிதர்களின் தலைமையில் 28 ஆண்டுகள் பயணம் செய்தது எனது பூர்வ ஜென்ம புண்ணியம். மிக மோசமான தோல்வி காலத்திலும் பாரதிய ஜனதா கட்சி காரன் என்று பெருமையுடன் பயணித்து வந்தேன்.

தமிழகத்தில் ஊழல் இல்லாத, போதைக்கு அடிமை, சினிமாவுக்கு அடிமை, குடும்ப ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்டு தமிழகத்தை ஒரு முன்னோடி மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே என்னுடைய சமுதாய பயணம். ஆனால் தற்போதைய தமிழக பாஜக சூழ்நிலையில் அது நிறைவேறும் என்ற நம்பிக்கையை முழுவதுமாக இழந்து இருக்கிறேன். யாரையும் குறை கூறாமல் கட்சிக்காக பாடுபட்ட இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து கட்சியில் உள்ள அனைவரையும் மிக முக்கிய தலைவர்கள் மரியாதை உடன் நடத்த வேண்டும் என்பது எனது ஆவல்.

இத்தனை ஆண்டு என்னுடன் பயணித்த எனது உறவுகளுக்கு நன்றியை தெரிவித்து மிக கனத்த இதயத்துடன் நான் உயிரிலும் மேலாக நேசித்த பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுகிறேன். தமிழக நலன் கொண்ட தேசிய சிந்தனை கொண்ட ஊழலற்ற நேர்மையான பிரம்மாண்ட வளர்ச்சித் தரும் என்று மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் பாதையில் அண்ணாமலை அண்ணலுடன் கைகோர்த்து பயணிக்க எனது அரசியல் நண்பர்களுடன் இணைந்து முடிவு எடுத்திருக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com