இலங்கை கோயிலில் ஆய்வு நடத்தக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் கடிதம்

இலங்கை கோயிலில் ஆய்வு நடத்தக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் கடிதம் எழுதியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சோழ மன்னர்கள் ஆட்சி செய்ததாக கூறப்படும் இலங்கையில் உள்ள பழமையான கோயிலில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று முன்னாள் சிலை கடத்தல் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையை 78 ஆண்டுகளுக்கும் மேலாக சோழ மன்னர்கள் ஆண்டதாக கூறப்படும் நிலையில், பொன் மாணிக்கவேல் மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இலங்கையில் இருக்கும் எடகடே கிராமத்தில் 1009 ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழன் கட்டிய உத்தம சோளீஸ்வரன் உடைய மகாதேவர் கோயில் இருப்பதாகவும் அந்த கோயிலை 1912-ம் ஆண்டு ஐரோப்பிய கிறிஸ்தவ கல்வெட்டு ஆய்வாளர்கள் கண்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.

வரலாற்று பொக்கிஷமாக இருக்கும் இந்த கோயிலில் மிகப்பெரிய கருங்கல் தூண் உள்ளதாகவும் அதில் இருக்கும் தமிழின் பழமையான வட்டெழுத்துகள் ராஜராஜ சோழனின் 78 ஆண்டுகால ஆட்சியை குறிப்பதாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 21 ஏக்கர் நிலம் கோயிலுக்கு தானமாக அளிக்கப்பட்டு அதின் வருமானத்தைக் கொண்டு கோயிலை பராமரிக்க வேண்டும் என்று கல்வெட்டில் கூறப்பட்டுள்ளதாகவும் பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

சோழ மன்னர்கள் ஆட்சி செய்ததை குறிக்கும் பழமையான கருங்கல் தூண் பற்றிய தகவல் இந்திய தொல்லியல் துறைக்கு தெரியவில்லை என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக தொல்லியல் துறையும் மத்திய கலாச்சாரத்துறையும் இலங்கை அரசுயுடன் கலந்து பேசி ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயிலில் ஆய்வு நடத்த வேண்டும் என்றும் பொன் மாணிக்கவேல் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com