முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை பா.ஜனதாவில் சேர்ந்தார்

கர்நாடக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை நேற்று திடீரென பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார். அப்போது விசுவாசமுள்ள தொண்டனாக பணியாற்றப்போவதாக அவர் தெரிவித்தார்.
முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை பா.ஜனதாவில் சேர்ந்தார்
Published on

புதுடெல்லி,

கர்நாடக மாநில ஐ.பி.எஸ். அதிகாரி கே.அண்ணாமலை. இவரது அதிரடி பணியை பாராட்டி கர்நாடக மக்கள் இவரை கர்நாடக சிங்கம் என்று அழைத்தனர். இவர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அண்ணாமலை, அரசியலில் ஈடுபடப்போவதாக தகவல் பரவியது. ரஜினிகாந்த் தொடங்கப்போகும் கட்சியில் அண்ணாமலை முதல்-அமைச்சர் வேட்பாளராக கூட ஆகலாம் என்றும் பேசப்பட்டது.

இந்தநிலையில் நேற்று மதியம் அவர் பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார். இந்த இணைப்பு நிகழ்ச்சி டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அண்ணாமலைக்கு தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கட்சி உறுப்பினர் அட்டையும் வழங்கினார், அப்போது தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசும்போது, தமிழ்நாட்டில் தேசிய உணர்வை கொண்டு வருவதற்காக தனது நேரத்தையும், சக்தியையும் அர்ப்பணிப்பதாக கூறிய அவர் எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் கட்சியில் சேர்ந்ததாக கூறினார். கட்சியில் ஒரு போதும் எதையும் கேட்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.

பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த ஒரு ஆண்டாக நான் சமுதாய பணியில் ஈடுபட்டு வந்தேன். ஒரு காலக்கட்டத்தில் சமுதாய மாற்றம் எப்படி முக்கியமோ, அதைப்போல அரசியல் மாற்றமும் முக்கியம் என்று உணர்ந்தேன். தமிழ்நாட்டின் அரசியல் எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். தமிழக அரசியல் குடும்ப அரசியல். அதை கொள்கையாகவே மாற்றி விட்டனர்.

பிரதமர் மோடியின் விசிறி நான். தேசிய பாதுகாப்பிலும், நாட்டின் முன்னேற்றத்திலும் எந்தவொரு சமரசமும் இல்லாமல், ஊழல் இல்லாமல் நல்ல ஆட்சியை சிறப்பாக கொடுத்து வருகிறார். இந்த கட்சியில் நான் ஒரு சாதாரண தொண்டனாக சேர்ந்து இருக்கிறேன். விசுவாசமுள்ள ஒரு தொண்டனாக என்னால் முடிந்த வேலைகளை செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அண்ணாமலை, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு ஜே.பி.நட்டா கட்சித்துண்டு அணிவித்து வாழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com