அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கம்

அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கப்பட்டு உள்ளார்.
அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கம்
Published on

சென்னை,

அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதற்காக நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என கட்சி தலைமை தெரிவித்து உள்ளது.

அ.தி.மு.க.வின் செயற்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கட்சி நடவடிக்கைகள் பற்றி கழக தலைமையின் முடிவுக்கு மாறான விசயங்களை தெரிவித்துள்ளார் என்றும் கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அன்வர் ராஜா, அ.தி.மு.க. சிறுபான்மை பிரிவு செயலாளர் பதவியில் இருந்தவர் ஆவார்.

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் கடந்த வாரம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா முதலில் பேசுவதற்கு எழுந்தார். சமீபத்தில் அவர், எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. எனவே அவருக்கு பேசுவதற்கு வாய்ப்பு வழங்க கூடாது என்று கூறி பலர் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்தனர். அன்வர் ராஜா மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருத்தணி ஹரி, அருள்மொழி தேவன் உள்ளிட்ட 5 நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

அன்வர் ராஜாவை நோக்கி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமான கருத்துகளை கூறினார். இதனால் அவருக்கும், சி.வி.சண்முகத்துக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் உருவாகும் சூழலும் எழுந்தது. இதையடுத்து அ.தி.மு.க. நிர்வாகி தமிழ் மகன் உசேன், அன்வர் ராஜாவை பேசாமல் அமருங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் அன்வர் ராஜா, நான் அவ்வாறு பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து கூச்சல்-குழப்பம் முடிவுக்கு வந்தது. எனினும் ஒரு வாரத்திற்குள், அவர் கட்சியில் இருந்து நீக்கம் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. அ.தி.மு.க.வின் செயற்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com