நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு 11-ந் தேதி வரை காவல்

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை வருகிற 11-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஆலந்தூர் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு 11-ந் தேதி வரை காவல்
Published on

ஆலந்தூர்,

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த மகேஷ் என்பவர், தனக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்து கொண்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவருடைய மருமகன் நவீன்குமார், மகள் ஜெயப்பிரியா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்ககோரி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 24-ந் தேதி ஜெயக்குமார், அவரது மகள், மருமகன் ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.

ஏற்கனவே 2 வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை இந்த வழக்கு தொடர்பாக ஆலந்தூர் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு வைஷ்ணவி முன் நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆஜர்படுத்தினர்.

பழிவாங்க...

அப்போது ஜெயக்குமார் நீதிமன்றத்தில் வாதம் செய்தார். அவர் பேசும்போது, இது குடும்ப சொத்து தொடர்பான வழக்கு. தி.மு.க. அரசு என் மீது வேண்டுமென்றே பழிவாங்க போடப்பட்ட வழக்கு. இது அண்ணன்-தம்பிக்கு இடையே உள்ள ஒரு சொத்துப்பிரச்சினை. இந்த விவகாரத்தில் என்னை எப்படி சேர்க்க முடியும்?. நான், 1991-ம் ஆண்டு முதல் பல்வேறு பதவிகளில் இருந்து வருகிறேன். என் மீது ஒரு வழக்குகூட கிடையாது. நான் திருக்குறள் படித்து உள்ளேன். எனக்கு ஒரு குறள் நினைவில் வருகிறது என்று கூறி,

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை என்ற திருக்குறளை கூறி வாதத்தை நிறைவு செய்தார்.

ஜெயக்குமார் தரப்பு வக்கீல் வாதாடும்போது, இது சிவில் வழக்கு. இதில் எப்படி நில அபகரிப்பு வரும்?. இந்த வழக்கு முழுவதும் அண்ணன்-தம்பிக்கு இடையே உள்ள ஒரு சொத்துப்பிரச்சினை. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எந்த வித தொடர்பும் இல்லை. எனவே இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும் என்றார்.

அரசு தரப்பு வக்கீல் வாதாடுகையில், ஜெயக்குமார் மீது போடப்பட்டுள்ள வழக்கில் ஆதாரங்கள் உள்ளன. இதனால் நீதிமன்ற காவலில் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும் என்றார்.

11-ந்தேதி வரை காவல்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட்டு வைஷ்ணவி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை வருகிற 11-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயக்குமாரை புழல் சிறைக்கு போலீசார் அழைத்துச்சென்றனர்.

முன்னதாக ஜெயக்குமாரை கோர்ட்டுக்கு அழைத்து வந்தபோது அங்கு கூடியிருந்த ஏராளமான அ.தி.மு.க.வினர், தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பா.ஜ.க. பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் தலைமையில் அங்கு வந்த பா.ஜ.க.வினரும் அ.தி.மு.க.வினருடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com