முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி 26-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

தேர்தலின்போது சொத்து விவரங்களை குறைத்து தவறான தகவல்களை தாக்கல் செய்ததாக எழுந்த புகாரின்பேரில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி 26-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
Published on

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி 3-வது முறையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் ஆணையத்தில் அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை குறைத்து, தவறான தகவல்களை கொடுத்திருப்பதாக சர்ச்சை எழுந்தது.

இந்தநிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல், மே, ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் கே.சி.வீரமணி மீது வேலூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். அதில், தேர்தல் ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தன் சொத்துகளை குறைத்து தவறான தகவல்களை அளித்திருப்பதாகவும், அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டிலும் தொழிலதிபர் ராமமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். ராமமூர்த்தி அளித்த புகாரை விசாரித்து கே.சி.வீரமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

கோர்ட்டு உத்தரவின்படி தேர்தல் ஆணையம் நடத்திய ஆய்வில் கே.சி.வீரமணி, பிரமாணப் பத்திரத்தில் சொத்துகளை குறைத்து தவறான தகவல்களை தாக்கல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருப்பத்தூர் கோர்ட்டில் இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தேர்தல் அலுவலர் பல்வேறு கோப்புகளை அளித்தார்.

அதன் அடிப்படையில் திருப்பத்தூர் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு பரிசீலனை செய்து, பி.என்.எஸ்.எஸ். பிரிவு 223-ன் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வருகிற 26-ந் தேதி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி நேரில் ஆஜராக வேண்டும் என திருப்பத்தூர் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com