சிறையில் சொகுசு வசதிகள்: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றம்

சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சொகுசு வசதிகளுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சிறையில் சொகுசு வசதிகள்: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றம்
Published on

சென்னை,

சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவரான நடிகை சாந்தினி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், மணிகண்டனுடன் தான் 5 வருடங்கள் கணவன்-மனைவி போல வாழ்ந்ததாகவும், 3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்து, பின்னர் அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்ததாகவும் கூறியிருந்தார்.

மேலும் மணிகண்டன் தற்போது தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் நடிகை சாந்தினி புகார் தெரிவித்து இருந்தார். இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மணிகண்டன் மீது 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் மணிகண்டன் முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து கடந்த 20 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பெங்களூருவில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதன் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் மணிகண்டனுக்கு செல்போன், ஏ.சி., சோபா உள்ளிட்ட சொகுசு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறைத்துறை டி.எஸ்.பி. தலைமையில் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் மணிகண்டனுக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் மணிகண்டன் இன்று புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் மணிகண்டனுக்கு சிறையில் சொகுசு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com