முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு நேற்று ஆஜராகவில்லை. உள்ளாட்சி தேர்தல் முடியும்வரை காலஅவகாசம் கேட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை
Published on

சென்னை,

அ.தி.மு.க. முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி மற்றும் தம்பி மீது கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சொத்து குவிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாக வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டது. 55 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி லஞ்ச ஒழிப்பு போலீசார் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட 26 இடங்களில் கடந்த ஜூலை மாதம் அதிரடி சோதனை நடத்தினார்கள். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சாய் கிருபா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு, கரூரில் உள்ள வீடு போன்ற வற்றில் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையில் ரூ.25.56 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அது தொடர்பாக விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில், தனக்கு சொந்த வீடு ஏதும் இல்லை என்றும், வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், சோதனையில் கைப்பற்றப்பட்ட ரொக்கப்பணம் மற்றும் ஆவணங்களுக்கு உரிய கணக்கு விவரங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 20-ந்தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் முதலில் சம்மன் அனுப்பினார்கள். அப்போதும் விஜயபாஸ்கர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. 30-ந்தேதி (நேற்று) சென்னை அல்லது கரூரில் விசாரணைக்கு ஆஜர் ஆவதாக விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

நேற்றும் விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. உள்ளாட்சி தேர்தல் முடியும்வரை அவர் மீண்டும் கால அவகாசம் கேட்டுள்ளார். உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும், நீங்கள் சொல்லும் தேதியில் கண்டிப்பாக ஆஜர் ஆவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார். கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேற்கண்ட தகவலை லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com