அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் தி.மு.க.வில் இணைகிறார்?

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் தி.மு.க.வில் இணைய உள்ளதாக வெளியான தகவல் கரூர் மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் தி.மு.க.வில் இணைகிறார்?
Published on

கரூர்,

கரூரை சேர்ந்த அ.தி. மு.க. முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கரூர் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி செயலாளர், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவிகளை வகித்தவர். கடந்த சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார்.

பணப்பட்டுவாடா விவகாரத்தில் தேர்தல் கமிஷன் ஆரம்பத்தில் அந்த தொகுதி தேர்தலை தள்ளி வைத்தது. பின்னர் நடந்த தேர்தலில் செந்தில்பாலாஜியே மீண்டும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் டி.டி.வி.தினகரன் அணியில் சேர்ந்து செயல்பட்டார். இதனால் செந்தில் பாலாஜி உள்பட 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் பதவி நீக்கம் செய்தார். தற்போது அரவக்குறிச்சி உள்பட காலியாக உள்ள தொகுதிகளில் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வினர் போட்டி போட்டுக்கொண்டு பூத் கமிட்டி கூட்டங்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜியும் அ.ம.மு.க. சார்பில் இடைவிடாது ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்று பேசி வந்தார். ஆனால் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சியில் வி.செந்தில்பாலாஜி பங்கேற்கவில்லை என கூறப்பட்டது.

அன்றிலிருந்து அவர் கட்சி மாறப்போகிறார், தி.மு.க.வில் இணைகிறார் என்ற தகவல் கசிந்தது. ஆனால் இதற்கு எந்த மறுப்பும் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேரடியாக தெரிவிக்கவில்லை. இதற்கிடையே நேற்று பிற்பகல் தி.மு.க. தலைமையுடன் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக மீண்டும் தகவல் வெளியானது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று மாலை கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் அ.ம.மு.க.வினர் திரண்டனர். பின்னர் அவர்களை வி.செந்தில்பாலாஜி சந்தித்தார். அப்போது, தற்போதைய நிலைமை சரியாக இல்லை. என்னுடன் வர விரும்புபவர்கள் வரலாம் என சூசகமாக கூறியுள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் அ.ம.மு.க.வின் இன்னொரு அமைப்பு செயலாளரும், முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சருமான பழனியப்பன், அதே அலுவலகத்தில் வி.செந்தில்பாலாஜியை சந்தித்தார். அவர்கள் இருவரும் நீண்டநேரம் ஆலோசனை நடத்தினர். அவர், செந்தில்பாலாஜியை சமாதானம் செய்ய வந்தாரா? அல்லது அவரும் தி.மு.க. பக்கம் சாய்கிறாரா? என தெரியவில்லை. இணைப்பு தேதி பற்றி உறுதியாக தெரியவில்லை.

சென்னையில் வருகிற 16-ந்தேதி நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் அவர் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணையலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் மூலமாக காய் நகர்த்தி வருவதாகவும் கருத்து நிலவுகிறது.

எனவே செந்தில்பாலாஜி கட்சி மாறுகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்த தகவல் கரூர் மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com