வி.சி.க.வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு விலகல்

குழப்பத்திலும், அவநம்பிக்கையிலும் செயல்படும் ஒரு தலைமையின் கீழ் இனியும் என்னால் பயணிக்க இயலாது என்று பனையூர் பாபு தெரிவித்துள்ளார்.
வி.சி.க.வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு விலகல்
Published on

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தோழர்களுக்கு வணக்கம்.. புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மாமேதை கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கருத்தியல்களையும் கோட்பாடுகளையும் தமிழ் சமூகத்தின் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித்தமிழர் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களின் பங்கு அளப்பரியது.

ஒடுக்கப்பட்ட மக்களை ஓர் அமைப்பாகத் திரட்டி, அவர்களை அதிகாரத்தை நோக்கி நகர்த்தியவர் அண்ணன் எழுச்சித்தமிழர். புரட்சியாளர் அம்பேத்கரின் “கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்” என்ற தாரக மந்திரத்தை உயிர் மூச்சாகக் கொண்டு, சாதி வெறி மற்றும் மத வெறி சக்திகளை அடையாளம் கண்டு அவர்களைச் சமரசமின்றி எதிர்ப்பதில் இந்திய அரசியல் களத்திலேயே அவருக்கு நிகர் யாருமில்லை என்றுதான் நான் முழுமையாக நம்பினேன். என்ன நெருக்கடி வந்த போதிலும், பதவிகளோ பரிசுகளோ ஆசை காட்டப்பட்ட போதும், ஏற்றுக் கொண்ட கொள்கையில் மலை போல் உறுதியாக இருப்பார் என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே லட்சோப லட்சம் சிறுத்தைகளைப்போல் நானும் அவரை எனது தார்மீக தலைவராக ஏற்றுக்கொண்டு அவர் பின்னால் அணிவகுத்தேன்.

கடந்த 2007-ஆம் ஆண்டு முதன்முதலில் அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்களுக்கு அறிமுகமானேன். அப்போதிருந்து எனது அரசியல் பயணம் அண்ணனோடு தொடங்கியது. வெவ்வேறு அரசியல் இயக்கங்களில் செயலாற்றிக் கொண்டிருந்த 5000-க்கும் மேற்பட்ட தம்பிமார்களை ஒருங்கிணைத்து, சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலையில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து, அவர்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் அதிகாரபூர்வமாக இணைந்தேன்.

இயக்கத்தில் நான் ஆற்றிய பணியை அங்கீகரித்து, 2009-ஆம் ஆண்டு ‘இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை’யின் மாநிலச் துணை செயலாளர் பொறுப்பை அண்ணன் அவர்கள் எனக்கு வழங்கினார்; அந்தப் பணியைத் திறம்படச் செய்தேன். ஊடகங்கள் நமது இயக்கத்தையும், நமது தலைவரின் குரலையும் இருட்டடிப்புச் செய்து ஓரங்கட்டப் பார்த்தபோது, இதனை எதிர்கொள்ள இயக்கத்திற்கென்று ஒரு தனி ஊடகம் உருவாக வேண்டும் என்ற சிந்தனை உருவானது. அப்போது, ‘வெளிச்சம்’ தொலைக்காட்சியை நிறுவும் முக்கியப் பொறுப்பைத் அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்.

நான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினராகச் சட்டமன்றத்திலும், எனது செய்யூர் தொகுதியிலும் மக்கள் பணிகளைத் திறம்படச் செய்துள்ளேன். கடந்த ஐந்து ஆண்டுகளில், சட்டமன்றத்திலும் தொகுதியிலும் நான் நிறைவேற்றிய எண்ணற்ற மக்கள் பணிகளில், வரலாற்றில் நிலைத்து நிற்கும் சில முக்கியச் சாதனைகளை மட்டும் இங்கே நினைவுகூர விரும்புகிறேன். சட்டமன்றத்தில், ஆதி திராவிடர் மக்களின் உரிமைக்காக நமது இயக்கத்தின் சார்பாக நான்

முன்வைத்த பல முக்கிய கோரிக்கைகள் செயல்வடிவம் பெற்றுள்ளன.

"விசில் அடிப்பவர்கள் எல்லாம் திரையரங்கத்திற்குத்தான் செல்ல வேண்டும், சட்டமன்றத்திற்கு வரக் கூடாது; அவர்கள் பெரியாரும் அம்பேத்கரும் பேசிய அரசியலையும், கொள்கைகளையும் வீழ்த்துவதற்கு வந்தவர்கள்" என்று சூளுரைத்த அவர், இன்று அவர்களுடனே கைகோர்க்கவும், இயக்கத்தின் கொள்கையை மழுங்கடிக்கவும் முற்படுவது முரண்பாட்டின் உச்சமாகும்.

ஆட்சி அதிகாரங்கள் வரும், போகும்; அது நிலையற்றது. ஆனால், அய்யா பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் நமக்கு வகுத்துத் தந்த கொள்கைகளே என்றென்றும் வாழும் நிலையான ஆயுதங்கள். அரசியல் தளத்தில், "மக்கள் சித்தாந்தங்களை விடக் கவர்ச்சியின் பின்னால் ஈர்க்கப்படுவது ஆபத்தானது" என்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனால் இன்று பயணித்துக் அந்த அபாயகரமான திசையில்தான் கொண்டிருக்கிறோமோ என அஞ்சுகிறேன்.

கொண்ட கொள்கையிலும், எடுக்கும் நிலைப்பாட்டிலும் உறுதியாக இல்லாமல், அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றி, குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் செயல்படும் ஒரு தலைமையின் கீழ் இனியும் என்னால் பயணிக்க இயலாது என எனது மனசாட்சி உணர்த்துகிறது. எனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் முழுமையாக விலகுகிறேன் என்ற எனது முடிவைக் கனத்த இதயத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் கட்சியிலிருந்து விலகினாலும், அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட கொள்கைகளிலும், கருத்தியலிலும் இம்மியளவும் பின்வாங்காமல் உறுதியாக நின்று பயணிப்பேன். புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மாமேதை கார்ல் மார்க்ஸ் ஆகியோர் காட்டிய வழியில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கான எனது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

நெருக்கடிகள் சூழ்ந்த போதும் கொள்கை நெறிப்படியே வாழ்தல் வீரம்.. நெருப்பலைக்குள் வீழ்ந்த போதும் அடிமை நெறி மீறி பாய்தல் தீரம்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com