

சென்னை,
2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமி ழக அரசியல் களம் பல திருப்பங்களை சந்தித்து வருகிறது. அ.தி.மு.க.வில் நிலவிய சலசலப்பு காரணமாக அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் பலர் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி. இளவரசன் விலகி உள்ளார். தனது விலகல் கடிதத்தை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் அனுப்பி உள்ளார். ஜெயலலிதா மறைவிற்குப் பின், கட்சியில் உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை என்றும் பணத்திற்கும், புதியவர்களுக்குமே வாய்ப்பு அளிப்பதாகவும், அதன் காரணமாகவே 11 தேர்தலில் அதிமுக தொடர் தோல்வி என இளவரசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் எம்.பி. இளவரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
திருச்சி ஆ.இளவரசன் எனும் நான், 1983-ம் ஆண்டிலிருந்து இன்று வரை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களுடைய ஆசியால் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் விசுவாச மிக்க தொண்டனாக பணியாற்றி இருக்கிறேன். கடந்த 42 ஆண்டுகளாக எந்த சூழ்நிலையிலும் கட்சியும் மாறவில்லை, கட்சி பிளவுபட்ட போதும் அணியும் மாறவில்லை.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, கழகம் தங்கள் தலைமையில் துடுப்பு இல்லாத படகைப் போல் அல்லாடுவதைக் கண்டு கண்ணீர் விடும் லட்சக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு மிகுந்த நம்பிக்கையுடன் கழகத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு உங்களை (எடப்பாடி பழனிசாமி) தேர்ந்தெடுத்தோம். ஆனால் கழகத் தொண்டர்களின் நம்பிக்கை நிலைக்குலைந்து போகும் அளவிற்கு கழகத்தில் தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் இருந்தன.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அனைத்து தேர்தல்களிலும் உழைப்பிற்கும் விசுவாசத்திற்கும் இடமில்லாமல் போனது. புதியவர்களும் பணத்திற்கும் மட்டுமே பிரதான இடம் பெற்றிருந்தது. இதன் காரணமாகவே கழகம் தொடர்ந்து பதினொரு முறை தோல்விகளை சந்தித்தது. முக்கியமாகத் தோல்விக்கான காரணத்தையும் ஆராயவில்லை.
பொதுச் செயலாளர் என்ற முறையில் தோல்விக்கு பொறுப்பேற்கவும் மறந்துவிட்டீர். மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைகளையும் புறந்தள்ளிவிட்டீர். அதைவிட கொடுமை, கழகத்தின் எதிர்கட்சியான திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஆதரவோடு முதலமைச்சராகுவதற்கும் துணிந்துவிட்டீர். எனவே கழகக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், அ.தி.மு.க அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் மிகுந்த மனவேதனையோடு வெளியேறுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.