

அடையாறு,
திருச்செங்கோடு தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யான குழந்தைவேலு, 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய மனைவி ரத்தினம் (வயது 63). இவர், சென்னை சாஸ்திரி நகர் 6-வது அவென்யூவில் வசித்து வந்தார்.
இவருக்கு சுதா என்ற மகளும், பிரவீன் (35) என்ற மகனும் உள்ளனர். சுதாவுக்கு திருமணமாகி குடும்பத்துடன் திருப்பூரில் வசித்து வருகிறார். மேல் படிப்பிற்காக வெளிநாடு சென்ற பிரவீன், மார்ச் மாதம் நாடு திரும்பினார். அப்போது அவர் வெளிநாட்டில் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த திருமணம் சம்பந்தமாகவும், சொத்து தொடர்பாகவும் தாய்க்கும், மகனுக்கும் பிரச்சினை இருந்து வந்தது.
இந்தநிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி இரவு பிரவீன் பெற்ற தாய் என்றும் பாராமல் ரத்தினத்தின் கை, கால்களை கட்டி, வாயில் பேப்பரை அடைத்து டேப்பால் ஒட்டினார். பின்னர் அவரது கழுத்தை நெரித்தும், கத்தியால் மார்பில் குத்தியும் கொடூரமாக கொலை செய்தார். பின்னர் உடலை வீட்டில் வைத்து, கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தப்பிச்சென்றுவிட்டார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த சாஸ்திரி நகர் போலீசார் பிரவீன் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும் பொருட்டு அவரது பாஸ்போர்ட்டை முடக்கினர். மேலும் அடையாறு உதவி கமிஷனர் வினோத் சாந்தாராம் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து அவரை தேடி வந்தனர்.
மேலும் இந்த வழக்கில் பிரவீன் தப்பிச்செல்ல உதவிய சென்னை பாலவாக்கம் ஜீவரத்தினம் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சத்தியஜோதி (36) மற்றும் அவருடைய மனைவி ராணி (34) ஆகியோரையும் கடந்த மே மாதம் போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்த பிரவீனை போலீசார் ரகசியமாக தேடி வந்தனர். இந்த நிலையில், பிரவீன் டெல்லியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து டெல்லி விரைந்த இன்ஸ்பெக்டர் பலவேசம் தலைமையிலான போலீசார், டெல்லி அருணாநகரில் ஒரு தனியார் ஓட்டலில் பதுங்கி இருந்த பிரவீனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
அவரை டெல்லியில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். கைதான பிரவீனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினால்தான் ரத்தினம் கொலைக்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
பெற்ற தாயை கொன்ற வழக்கில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த மகனை தற்போது போலீசார் கைது செய்து உள்ளதால் இந்த வழக்கில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.