முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் த.வெ.க.வில் இணைந்தார்

விஜய் அரசியலுக்கு வருவது மக்களுக்கு தெம்பை கொடுத்திருக்கிறது என லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் த.வெ.க.வில் இணைந்தார்
Published on

சென்னை,

அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் இன்று விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ளார். அக்கட்சியின் தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து அவர் த.வெ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

லோகேஷ் தமிழ்ச்செல்வன் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டார். த.வெ.க.வில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய லோகேஷ், “எனது தந்தை 1972-ல் இருந்து அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக இருந்து பணியாற்றியவர். கடுமையாக உழைத்து கட்சியை வளர்த்த அவர், தொடர்ந்து 7 முறை எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறார்.

ஆனால் அ.தி.மு.க.வில் எனது தந்தை போன்ற மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதை கொடுப்பதில்லை. எனது தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் போனபோது அ.தி.மு.க.வில் இருந்து யாரும் வந்து பார்க்கவில்லை. மனதளவில் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டோம்.

நான் சிறுவயது முதலே விஜய்யின் ரசிகன். அவர் கட்சி தொடங்கியதில் இருந்து அவரது பேச்சு மற்றும் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டேன். விஜய் அரசியலுக்கு வருவது மக்களுக்கு தெம்பை கொடுத்திருக்கிறது. அவருக்கு அமோகமான வரவேற்பு இருக்கிறது. நிச்சயமாக 2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் விஜய் வெற்றி பெற்று முதல்-அமைச்சராக பதவியேற்பார்” என்று தெரிவித்தார்.

இதேபோல், தலித் எழில்மலையின் மகளான கேத்ரின் எழில் மலை, இமானுவேல் சேகரனின் பேரன் சக்கரவர்த்தி, அசோக்(ரஜினி ரசிகர் மன்றம் மா.செ தி.நகர்) மற்றும் பாபுஜி கௌதம்(அ.தி.மு.க.) ஆகியோரும் விஜய்யை இன்று நேரில் சந்தித்து த.வெ.க.வில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com