

நெல்லை,
நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராக இருந்தவர் க.ப. அறவாணன். இவர் நெல்லை மாவட்டத்தின் கடலங்குடியை சேர்ந்தவர். இந்திய பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்றத்தின் முன்னாள் செயலாளரும் மற்றும் பொருளாளரும் இஸ்லாமிய தமிழிலக்கிய கழகத்தின் வாழ்நாள் உறுப்பினரும் ஆவார்.
தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பாடத்திட்ட குழு உறுப்பினரான இவர் சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு முதலான துறைகளில் 56 நூல்களை வெளியிட்டுள்ளார்.
அவற்றில் தொல்காப்பிய களஞ்சியம், தமிழ் மக்கள் வரலாறு மற்றும் சைனர்களின் தமிழிலக்கண நன்கொடை போன்றவை அடங்கும்.
இவர் தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசினை 3 முறை பெற்றுள்ளார். கடந்த 1986ம் ஆண்டில் சிறந்த பேராசிரியர்களுக்கான விருதும் பெற்றுள்ளார். இவர் ஆசிரியராக இருந்து பல இதழ்களையும் வெளியிட்டு உள்ளார்.