

சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தி.மு.க. கூட்டணியா, அ.தி.மு.க. கூட்டணியா என்று மதில்மேல் பூனையாக இருந்த தே.மு.தி.க., கடைசியில் இன்று (வியாழக்கிழமை) தி.மு.க. கூட்டணியை உறுதி செய்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு வந்த தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தார்.
சமீபத்தில் கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி விழாவில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய இணை மந்திரி எல்.முருகன், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதாவும் கலந்து கொண்டார். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் தே.மு.தி.க. இணைவது குறித்து பேசப்பட்டதா? என யூகங்கள் எழுந்த நிலையில், இன்று தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது.
இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “இது வெறும் அரசியல் முடிவு அல்ல. மக்களின் நம்பிக்கையை காக்கும் என் உறுதி. கேப்டன் விஜயகாந்த் ஆசீர்வாதத்துடன், மக்களின் ஆதரவுடன், நிச்சயம் நாம் வெல்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.
இதனிடையே தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்ததற்கு ம.தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், சட்டமன்ற வளாகத்தில் இன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “கூட்டணி அமைப்பது அந்தந்த கட்சி தலைவர்களின் விருப்பம்” என்று தெரிவித்தார்.