பார்முலா 4 கார் பந்தயம் : எப்.ஐ.ஏ. சான்று பெற 8 மணி வரை அவகாசம் - ஐகோர்ட்டு உத்தரவு

மாலை 6 மணிக்குள் எப்.ஐ.ஏ. சான்றிதழ் கிடைத்துவிடும் என்றும் ரேசிங் நிறுவனம் சார்பில் நீதிபதிகளிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தெற்காசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் இரவு நேரத்தில் சாலையில் பார்முலா 4 கார் பந்தயம் இன்றும், நாளையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தீவுத்திடல், போர் நினைவு சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை வரை 3.5 கிலோமீட்டர் போட்டிக்குரிய தூரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

19 திருப்பங்கள், அதிவேக நேர் வழிகளுடன் பந்தய பாதை அமைந்துள்ளது. இதையொட்டி சாலையின் இரு புறமும் தடுப்பு சுவருடன், கம்பி அமைக்கப்பட்டுள்ளது. வளைவுகளில் கார்களின் பாதுகாப்புக்காக நிறைய டயர்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.இந்த போட்டியை ஏறக்குறைய 9 ஆயிரம் ரசிகர்கள் நேரில் கண்டுகளிக்க உள்ளனர்.

இந்த சூழலில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த எப்.ஐ.ஏ. (FIA) சான்றிதழ் பெற கால நீட்டிப்பு கோரி, சென்னை ஐகோர்ட்டின் முதன்மை அமர்வில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அவசர முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் எப்.ஐ.ஏ. சான்று பெற இரவு 8 மணி வரை அவகாசம் அளித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

முன்னதாக பார்முலா 4 கார் பந்தயம் தொடங்குவதற்கு முன் சான்று பெறப்படும் என்றும், சான்று மறுக்கப்பட்டால் கார் பந்தயம் தள்ளி வைக்கப்படும் என்றும் தமிழக அரசு, ரேசிங் நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது. மேலும் மாலை 6 மணிக்குள் எப்.ஐ.ஏ. சான்றிதழ் கிடைத்துவிடும் என்றும் ரேசிங் நிறுவனம் நீதிபதிகளிடம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில் பார்முலா 4 கார் பந்தயம் தொடர்பாக முதற்கட்ட அனுமதியை எப்.ஐ.ஏ. வழங்கி உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இரவு 7 மணிக்கு கார் பந்தய பயிற்சி போட்டிகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com