பார்வர்டு பிளாக் மூத்த தலைவர் சந்தானம் மரணம் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

பார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சந்தானம் நேற்று மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
பார்வர்டு பிளாக் மூத்த தலைவர் சந்தானம் மரணம் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
Published on

உசிலம்பட்டி,

பார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சந்தானம், உடல் நலக்குறைவால் நேற்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80.

அவரது சொந்த ஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள மேலப்பெருமாள்பட்டி ஆகும். சந்தானத்தின் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டது.

பார்வர்டு பிளாக், அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் சந்தானத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். சந்தானத்தின் உடல் அடக்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவரது சொந்த ஊரில் நடைபெறுகிறது.

சந்தானம், சக்கரப்பநாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவராக 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் செல்லம்பட்டி ஒன்றிய தலைவராக 3 முறை இருந்தார்.

1996-ம் ஆண்டில் தி.மு.க. ஆதரவுடன் சோழவந்தான் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 2001-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆதரவுடன் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.

சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவராகவும் இருந்தார். பார்வர்டு பிளாக் கட்சியில் பி.கே.மூக்கையா தேவருடன் இணைந்து பணியாற்றியவர்.

சந்தானம் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவர் சந்தானம் மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவரது மறைவு எனக்கு துயரத்தையும், மிகுந்த வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது. அவரது மறைவுக்கு தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், பார்வர்டு பிளாக் கட்சி தொண்டர்களுக்கும் ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதேபோல், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, அகில இந்திய பார்வர்டு பிளாக் (தினகரன் பிரிவு) மாநில பொதுச்செயலாளர் எஸ்.தினகரன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com