

திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பாதையில் இன்று மதியம் நிகழ்ந்த பயங்கர கார் விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், அடுக்கம் மலைப்பாதையின் குறுகிய வளைவுப் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காருக்கு எதிரே வந்த மற்றொரு வாகனம் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வாகனத்திற்கு வழிவிட முயன்ற கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக சுமார் 200 அடி ஆழமுள்ள மலைப்பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது.
விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற வாகன ஓட்டிகள் உடனடியாக காவல் துறை மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர், பள்ளத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 4 பேரையும் பத்திரமாக மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அடுக்கம் மலைப்பாதை மிகவும் குறுகிய மற்றும் செங்குத்தான வளைவுகளைக் கொண்டது என்பதால், வாகன ஓட்டிகள் இப்பாதையில் மிகுந்த எச்சரிக்கை மற்றும் குறைந்த வேகத்தில் பயணிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இந்த விபத்து குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப் பதிவு செய்து, காயமடைந்தவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.