குரூப்-2ஏ தேர்வு முறைகேடு வழக்கில் வணிக வரி அதிகாரிகள் உள்பட மேலும் 4 பேர் கைது

குரூப்-2ஏ தேர்வு முறைகேடு வழக்கில் வணிக வரி அதிகாரிகள் உள்பட மேலும் 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
குரூப்-2ஏ தேர்வு முறைகேடு வழக்கில் வணிக வரி அதிகாரிகள் உள்பட மேலும் 4 பேர் கைது
Published on

சென்னை,

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4, குரூப்-2ஏ தேர்வுகளில் நடந்த முறைகேடு வழக்குகளில் தோண்ட, தோண்ட வரும் புதையலைப்போல தினந்தோறும் கைது நடவடிக்கைகளும், அதிர்ச்சி தகவல்களும் வந்த வண்ணம் உள்ளன.

நேற்று முன்தினம் வரை இந்த இரண்டு முறைகேடு வழக்குகளிலும் மொத்தம் 25 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். குரூப்-2ஏ தேர்வில் முறைகேடாக தேர்வு பெற்ற மேலும் 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் கைது எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ள கைதானவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. தீபக் (வயது 31)- இவர் சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்தவர். இவர் கொடுத்த லஞ்சப்பணம் ரூ.8 லட்சம். இவர் சென்னை தலைமைச் செயலகத்தில் நிதித்துறையில் உதவியாளராக பணி செய்தார். தேர்வில் இவர் பெற்ற மதிப்பெண் 265.5. இவர் பெற்ற இடம் 39. தலைமைச் செயலகத்தில் உள்துறையில் பணியாற்றிய ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

2. வினோத்குமார் (37)- திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரைச் சேர்ந்தவர். இவர் கொடுத்தது ரூ.9 லட்சம். இவர் 273 மதிப்பெண்கள் பெற்று 27-வது இடத்தில் தேர்ச்சி பெற்றார். இவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள வணிக வரி அலுவலகத்தில் உதவியாளராக வேலையில் சேர்ந்தார்.

3. அருண்பாலாஜி (30)- இவரும் செய்யாரை சேர்ந்தவர்தான். இவர் கொடுத்த லஞ்சப்பணம் ரூ.13 லட்சம். இவர் 246 மதிப்பெண்கள் பெற்று, 298-வது இடத்தில் தேர்ச்சி பெற்றார். ஆற்காட்டில் உள்ள வணிக வரி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றினார்.

4. தேவி (35)- இவர் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தைச் சேர்ந்தவர். இவரது கணவர் பெயர் ஜெயக்குமார். இவர் கொடுத்தது ரூ.13 லட்சமாகும். இவர் 282 மதிப்பெண்கள் பெற்று, 10-வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். நாகர்கோவிலில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்தார். இவர்கள் 4 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து கைது வேட்டை நடந்து கொண்டே இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com