

கோவில்பட்டி:
போலி சான்றிதழ் கொடுத்து மோசடி செய்து கோவில்பட்டி அரசு பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டார்.
போலி சான்றிதழ்
கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர் ராசாத்தி (வயது 47). இவர் பணியில் சேர்ந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து சிறப்புநிலை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு விண்ணப்பித்தார்.
இதையடுத்து இவரது சான்றிதழ்களை அரசு தேர்வுகள் துறை இயக்குனரகத்தில் சரிபார்த்தனர். இதில் ராசாத்தி ஆசிரியர் பட்டய பயிற்சி படிப்பில் ஆங்கில பாடத்தில் 37 மதிப்பெண்கள் பெற்றதும், ஆனால் அவர் அந்த பாடத்தில் 77 மதிப்பெண்களை பெற்றதாக போலியாக சான்றிதழ் தயாரித்து சமர்ப்பித்து மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
ஆசிரியை பணி நீக்கம்
இதையடுத்து ஆசிரியை ராசாத்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை பணிநீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இதுதொடர்பாக கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் சின்னராசு அளித்த புகாரின்பேரில், போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்ததாக ராசாத்தி மீது கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியை ராசாத்தி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கடந்த 1994-1996-ம் ஆண்டில் ஆசிரியர் பட்டய படிப்பு படித்து விட்டு, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றினார். பின்னர் தூத்துக்குடி மாவட்டம் புதூரில் பணியாற்றிய இவர் கடந்த மார்ச் மாதம் இடமாறுதல் பெற்று நாலாட்டின்புத்தூரில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.