கிறிஸ்தவ பேராய சொத்துகளை விற்று மோசடி; பாதிரியார் கைது

கிறிஸ்தவ பேராய சொத்துகளை விற்று மோசடி செய்த பாதிரியாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிறிஸ்தவ பேராய சொத்துகளை விற்று மோசடி; பாதிரியார் கைது
Published on

செங்கல்பட்டு மறை மாவட்ட கிறிஸ்தவ பேராயத்துக்கு சொந்தமான சொத்துகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல இடங்களில் உள்ளது. இதன் அலுவலகம், ஆயர் இல்லம் திம்மாவரத்தில் உள்ளது. பேராய சொத்துகள் ஆயர் கட்டுப்பாட்டின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் மைக்கேல்பட்டியை சேர்ந்த பாதிரியார் சிரில்ராஜ்(வயது 53) என்பவரை இந்த சொத்துகளை நிர்வகிக்க ஆயர் நியமித்தார். சொத்துகள் வாங்க, விற்க, பராமத்து வேலை செய்ய, வரி செலுத்த போன்ற பணிகளை செய்வதற்கு அவருக்கு பொது அதிகாரம் வழங்கப்பட்டது.

ஆனால் சிரில்ராஜ், அந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பேராயத்துக்கு சொந்தமான படூர், தையூர், இரும்புலியூர், புனித தோமையர்மலை ஆகிய இடங்களில் உள்ள சுமார் 4 ஏக்கர் விலை உயர்ந்த இடத்தை சுமார் 66 பேருக்கு சட்டவிரோதமாக ஆயர் இல்லத்தின் அனுமதி இல்லாமலும், யாருக்கும் தெரியாமலும் ரூ.11 கோடியே 68 லட்சத்துக்கு விற்று பேராயத்துக்கு நம்பிக்கை மோசடி செய்ததுடன், விற்ற பணத்தை பேராயத்தின் வங்கி கணக்கில் செலுத்தாமல் கணக்கு காட்டாமல் ஏமாற்றியது தெரியவந்தது.

இதையடுத்து தாம்பரம் கோர்ட்டு உத்தரவுபடி தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாதிரியார் சிரில்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com