தி.மு.க. முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது ரூ.3.35 கோடி மோசடி புகார்

சமீபத்தில் கூட தீபாவளி பண்டிகைக்கு முன்பாக நான் கொடுத்த பணத்தை திருப்பி தருவதாக கூறினார்கள் என்று சிவசங்கர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் சிவசங்கர்
முன்னாள் அமைச்சர் சிவசங்கர்
Published on: 

சென்னை,

சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் அருண்ராஜ் (வயது 42). இவர் கட்டிட 'கான்ட்ராக்ட் நிறுவனம்' நடத்தி வருகிறார். 9 லாரிகளும் இவருக்கு சொந்தமாக உள்ளது. இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினரோடு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- எனது சொந்த ஊர் அரியலூர் ஆகும். நான் தற்போது சென்னை கே.கே.நகரில் வசித்து வருகிறேன். தி.மு.க. முன்னாள் அமைச்சர் சிவசங்கரை, சிவநேசன் என்பவர் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். சிவசங்கர், அவரோடு சேர்ந்து 'கான்ட்ராக்ட் தொழில்' செய்ய என்னை கேட்டுக்கொண்டார். சிவசங்கர் கல்குவாரி தொழிலில் ஈடுபட்டார். அதற்கு எனக்கு சொந்தமான 9 லாரிகளையும் பயன்படுத்திக்கொண்டார். சிவசங்கரின் தேர்தல் செலவிற்காக ரூ.25 லட்சம் கொடுத்தேன்.

சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ரூ.3.35 கோடி வரை அவருக்காக செலவு செய்தேன். அதில் ரொக்கமாக ரூ.1.35 கோடி சிவநேசன் மூலமாக கொடுத்தேன். சிவசங்கர் செய்த தொழிலில் எனக்கு எந்தவித லாபத் தொகையையும் தரவில்லை. இதனால் நான் செலவு செய்த ரூ.3.35 கோடி பணத்தையும் திருப்பி கேட்டேன். திருப்பி தருவதாக சிவசங்கர் சொல்லி வந்தார்.

சமீபத்தில் கூட தீபாவளி பண்டிகைக்கு முன்பாக நான் கொடுத்த பணத்தை திருப்பி தருவதாக கூறினார்கள். ஆனால் திருப்பி தரவில்லை. முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீதும், அவருக்கு பினாமியாக செயல்படும் சிவநேசன் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து எனக்கு தர வேண்டிய ரூ.3.35 கோடி பணத்தையும் வசூலித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

பயத்தால் புகார் கொடுக்கவில்லை

புகார் மனு கொடுத்த பிறகு அருண்ராஜ், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: "நான் சிவசங்கரிடம் கொடுத்த பணம் அனைத்தையும் ரொக்கமாகக் கொடுத்தேன். சிவநேசன் எனது பெயரில் இருந்த சொத்துகளை எல்லாம் விற்றுவிட்டார். நான் போய்க் கேட்டால் லாரியை ஏற்றிக் கொன்று விடுவதாக மிரட்டுகிறார். முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பின்னணியில் இருப்பதால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். போன ஆட்சியில் புகார் கொடுத்திருக்கலாம். ஆனால், பயத்தால் நாங்கள் புகார் கொடுக்கவில்லை.எங்களிடம் ஆடியோ, வீடியோ ஆதாரங்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள், கால் ரெக்கார்டிங் மற்றும் நான் அவர்களுடன் இருந்த புகைப்படங்கள் அனைத்தும் இருக்கின்றன. அவற்றை காவல் துறையிடம் அளிக்கத் தயாராக இருக்கிறேன். முன்னாள் அமைச்சர் சிவசங்கரிடம் வாட்ஸ்அப் மூலம் உரையாடியிருக்கிறேன். காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும்" என்று தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது ஏற்கனவே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு தொடர்பாக அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் நேரடியாக ஆஜர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

X