விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 1,000 யூனிட் ஆக உயர்வு -தமிழக அரசு உத்தரவு

விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 2 மாதத்துக்கு 1,000 யூனிட் ஆக உயர்த்தி அரசு உத்தரவிட்டு உள்ளது.
விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 1,000 யூனிட் ஆக உயர்வு -தமிழக அரசு உத்தரவு
Published on

சென்னை,

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின்போது தற்போதைய ஆளும்கட்சி தரப்பில் தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. அதில், விசைத்தறிக்கு 2 மாதத்துக்கு 750 யூனிட் ஆக உள்ள இலவச மின்சாரம் 1,000 யூனிட் ஆக உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும். இந்த சலுகை விசைத்தறி, பாய், நெசவு தொழிலுக்கும் அளிக்கப்படும்.

விசைத்தறி தொழில் வளர்ச்சிக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் அரசு முழுமையாக வழங்கும் என்று கூறப்பட்டு இருந்தது. இதுகுறித்து தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் அரசுக்கு கடிதம் எழுதி, இந்த அறிவிப்பு தொடர்பான அரசாணை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

1,000 யூனிட் ஆக உயர்வு

இந்தநிலையில், கைத்தறிகள் கமிஷனர், அரசுக்கு கடிதம் எழுதினார். அதில், ''விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தின் யூனிட்டை 751-ல் இருந்து 1,000 ஆக உயர்த்தும் வகையில், ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற வீதம், தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.21.92 கோடி நிதிக்கு கூடுதலாக ரூ.31.70 கோடியை சேர்த்து அளித்து, மொத்தம் ரூ.53.62 கோடியை மானியமாக வழங்க வேண்டும்'' என்று கோரியிருந்தார்.

அவரது கோரிக்கையை அரசு கவனமுடன் பரிசீலித்து விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தை 2 மாதங்களுக்கு 1,000 யூனிட் ஆக உயர்த்தி உத்தரவிடுகிறது. யூனிட்டுக்கு 75 பைசா வீதம் கட்டவேண்டிய கட்டணம் மானியமாக ஒதுக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com