நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி

இந்த பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 20 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
சென்னை,
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சாலை போக்குவரத்து நிறுவனத்தின் (ஐ.ஆர்.டி.) மூலம் பெண்களுக்கான இலவச கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.
அதன்படி, கும்மிடிப்பூண்டி, விழுப்புரம், வேலூர், திருச்சி, கும்பகோணம், காரைக்குடி, புதுக்கோட்டை, சேலம், தருமபுரி, பொள்ளாச்சி, ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் உள்ள பயிற்சி மையங்களில் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
இந்த பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 20 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். தமிழில் பேசவும், புரிந்துகொள்ளும் திறனும் இருக்க வேண்டும். இலகுரக வாகன உரிமம் எடுத்து ஓர் ஆண்டு நிறைவடைந்திருக்க வேண்டும். பி.எஸ்.வி. பேட்ஜ் பதியப் பெற்றிருக்க வேண்டும்.
ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போனை எப்போதும் செயல்பாட்டில் இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். 65 வேலை நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி பெற விரும்புபவர்கள் https://www.tnskill.tn.gov.in என்ற இணையதளத்தின் உள்ளே சென்று, 'வர்த்தக வாகன ஓட்டுனர் பயிற்சி நிலை 4' என்ற பாடத் திட்டத்தை தேர்வு செய்து அதில் பயிற்சி மையத்தை தேர்வு செய்து ஆதார் எண் மூலம் உங்கள் தகவல்களை பகிர்ந்து விண்ணப்பித்துக் கொள்ளலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஆகஸ்டு 20-ந் தேதி கடைசி நாள். மேற்கண்ட தகவல்களை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.






