ஊரக மகளிருக்கு இலவச கறவை மாடுகள், 5 ஆடுகள்: விண்ணப்பிக்க டிசம்பர் 17 கடைசி நாள்

கால்நடை வழங்கும் திட்டத்தில் பயன்பெற்றவர்கள் மற்றும் ஏற்கனவே கறவை மாடு வைத்துள்ளோர் விண்ணப்பிக்க இயலாது.
இலவச கறவை மாடு
Published on: 

சென்னை,

ஊரக மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழக அரசு 100 சதவீத மானியத்தில் இலவச கறவை மாடுகள் மற்றும் 5 ஆடுகள் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியினை உறுதி செய்யவும், பால் உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும் நடப்பாண்டில் தகுதி வாய்ந்த ஊரக மகளிருக்கு 100 சதவீதம் மானியத்தில் கறவை மாடுகள் மற்றும் செம்மறி ஆடு / வெள்ளாடுகள் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

1. ஊரக மகளிருக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம்

வழங்கப்படும் பயன்கள்

இத்திட்டத்தில் ரூ.50,000/- மதிப்புள்ள கறவை மாடும், அவற்றுக்கு 2 வருடங்களுக்கான காப்பீடும் வழங்கப்படும். மேலும், கறவைப் பசுவை வீடுகளுக்குக் கொண்டு செல்ல போக்குவரத்து மற்றும் உடனடித் தீவனச் செலவினத்திற்காக ரூ.3,000/- வழங்கப்படும்.

தகுதிகள் மற்றும் முன்னுரிமை

18 முதல் 60 வயதிற்குட்பட்ட மகளிர் மற்றும் திருநர்கள், கறவைப் பசு வளர்ப்பதில் ஆர்வமும், போதுமான இடவசதி உள்ளோர் பயன்பெறலாம்.

* ஆதரவற்ற விதவைகள்,

* கணவரால் கைவிடப்பட்ட மகளிர்,

* திருநர்கள்,

* மாற்றுத்திறனாளி மகளிர்,

மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் அல்லது மாற்றுத்திறனுடைய குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட மகளிர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தகுதியற்றவர்கள்

2.5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்கு மேல் உள்ளவர்கள், முந்தைய ஆண்டுகளில் கால்நடை பராமரிப்புத் துறையின் கால்நடை வழங்கும் திட்டத்தில் பயன்பெற்றவர்கள் மற்றும் ஏற்கனவே கறவை மாடு வைத்துள்ளோர் விண்ணப்பிக்க இயலாது.

செயல்படுத்தப்படும் இடங்கள்

சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் 'வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டம்' (Focus Block Development Programme) செயல்படும் 50 ஊராட்சி ஒன்றியங்களில் முதற்கட்டமாகச் செயல்படுத்தப்பட உள்ளது.

2. வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்

வழங்கப்படும் பயன்கள்

இத்திட்டத்தில் ரூ.30,000/- மதிப்புள்ள 5 செம்மறி ஆடு/வெள்ளாடுகள் (1 ஆண் கிடா மற்றும் 4 பெண் ஆடுகள் அல்லது 5 பெண் ஆடுகள்) அவற்றிற்கு 2 ஆண்டுகளுக்கான காப்பீடும் வழங்கப்படும். ஆடுகளை வீடுகளுக்குக் கொண்டு செல்ல போக்குவரத்து மற்றும் உடனடித் தீவனச் செலவினத்திற்காக ரூ.2,500/- வழங்கப்படும். மேலும், ஆடுகளை நல்ல முறையில் பராமரித்து வருவோருக்கு ஓராண்டுக்குப் பிறகு ரூ.2,000/- ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

தகுதிகள்

18 முதல் 60 வயதிற்குட்பட்ட ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மகளிர், திருநர்கள், மாற்றுத்திறனாளி மகளிர், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் அல்லது மாற்றுத்திறனுடைய குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட மகளிர் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

தகுதியற்றவர்கள்

பயனாளிகள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் நிலம் உள்ளவர்கள், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்கு மேல் உள்ளவர்கள், முந்தைய ஆண்டுகளில் கால்நடை பராமரிப்புத் துறையின் கால்நடை வழங்கும் திட்டத்தில் பயன்பெற்றவர்கள், கால்நடை வைத்திருப்போர் மற்றும் 100-எண்ணிக்கைக்கு மேல் கோழியினம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க இயலாது.

செயல்படுத்தப்படும் இடங்கள்

சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் 'வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டம்' (Focus Block Development Programme) மற்றும் 'மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி' (State Balanced Growth Fund) திட்டம் ஆகியன செயல்படும் 100 ஊராட்சி ஒன்றியங்களில் முதற்கட்டமாகச் செயல்படுத்தப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கால அளவு

இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் ஊராட்சி ஒன்றியங்கள் குறித்த விவரங்களை அந்தந்த மாவட்ட இணையதளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் இணையதளத்தில் (www.ahd.tn.gov.in) அறிந்து கொள்ளலாம்.

இத்திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் tnahschemes.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்கத் தெரியாதவர்கள் அருகிலுள்ள கால்நடை நிலையங்களை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 17.12.2026 அன்று விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X