

சென்னை,
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது கழிப்பிட மேலாண்மை திட்டத்தின் கீழ், இதுவரை 853 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள் 7644 கழிப்பிட இருக்கைகளுடன் அமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையாளர் ஜி. எஸ். சமீரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன், இன்று (15.11.2026) அண்ணா மண்டலம், அண்ணா நகர் டவர் பூங்காவில் உள்ள இலவச பொது கழிப்பறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் மற்றும் பூங்காவிற்கு வருகை தரும் பயனாளர்களிடம் அதன் பயன்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து கருத்துகளை கேட்டறிந்தார்.
சென்னை மாநகரில் பொதுமக்களுக்கு நல்ல சுகாதார வசதிகளை ஏற்படுத்தி தருதல் மற்றும் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்த்தல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே உள்ள கழிப்பறைகளை சுகாதாரமாக பராமரித்தல் மற்றும் புதிய கழிப்பறைகள் கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் பயன்பெறும் வகையிலும், தூய்மையாகவும், பாதுகாப்பாகவும், எளிதாக பயன்படுத்த கூடியதாகவும் இருக்கும் வகையிலும் சென்னை மாநகரின் பல பகுதிகளில் பொது கழிப்பிட மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 1,479 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள் 10,444 கழிப்பிட இருக்கைகள் அமைத்திட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், நான்கு சிப்பங்களாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவற்றில், 853 இடங்களில் 7644 இருக்கைகளுடன் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 193 இடங்களில் 1270 இருக்கைகளுடன் கழிப்பறை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், 433 இடங்களில் 1530 இருக்கைகளுடன் ஒப்பனை அறைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த கழிப்பறைகள் பொதுமக்கள் கட்டணமில்லாமல் பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. மேலும், சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளிலும், மக்கள் அதிகம் கூடுமிடங்களிலும் முறையான களஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அந்த இடங்களுக்கு ஏற்ற வகையில் பொதுக்கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மழை மற்றும் வெயிலிலிருந்து பாதுகாப்பு, காற்றோட்டம், வெளிச்சம் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் மற்றும் திருநங்கைகள் எளிதாக பயன்படுத்தும் வகையிலும் பாதுகாப்பு உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகளுடனும் இந்த கழிப்பிடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கழிப்பிடத்திற்கும் தனித்தனியாக பணியாளர்கள் அமர்த்தப்பட்டு, அட்டவணையின்படி தொடர்ந்து சுத்தம் செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணியாளர்களின் பாதுகாப்பிற்காக கையுறை, முகக்கவசம், காலணிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இவர்களுக்கு பாதுகாப்பு நடைமுறைகள், ரசாயனங்களை முறையாக கையாளுதல், தனிப்பட்ட சுகாதாரம் குறித்தும் தொடர் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கழிப்பிடங்களில் மக்களின் கருத்துகளை பெறவும், குறைகள் இருப்பின் அவற்றை விரைந்து நிவர்த்தி செய்யவும் QR குறியீடு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெறப்படும் புகார்கள் பதிவு செய்யப்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வும் காணப்படுகிறது. புகாரின் நிலை குறித்து பயனாளர்களுக்கு தகவலும் வழங்கப்படுகிறது. மேலும், மக்களின் தேவைக்கேற்ப மாநகராட்சி பூங்காக்கள், மயானபூமிகள் உள்ளிட்ட இடங்களிலும் கழிப்பிடங்கள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட உள்ளது.
இந்த பொது கழிப்பிட மேலாண்மை திட்டமானது திறந்தவெளியில் மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதை தவிர்த்து பொதுசுகாதாரத்தை மேம்படுத்துகிறது. சென்னை மாநகராட்சியின் நகர சுகாதாரத்தில் ஒரு மைல்கல்லாகவும், நாட்டிலேயே ஒரு முன்மாதிரி திட்டமாகவும் விளங்குகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.