

சென்னை,
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் இரண்டு நாட்கள் நடத்தப்படும் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
2021-2022ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, யுமாஜின் - வருடாந்திர தொழில்நுட்ப தலைமை உச்சி மாநாட்டை சென்னையில் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, முதலாவது "யுமாஜின்" மாநாடு 2023ம் ஆண்டு மார்ச் 23 முதல் 25 வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) மூலம் "யுமாஜின் மாநாடு 2024" எனும் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
மாநாட்டின் முதல் நாளான இன்று, பொருளாதார வளர்ச்சியை வழங்கவல்ல தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான நோக்கத்தை முன்னெடுப்பதற்கான ஒரு தளமாக, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து உலகளாவிய தொழில்நுட்ப நிகழ்வைச் சென்னையில் நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
முன்னதாக, இந்நிகழ்வின்போது வரவுசெலவுத் திட்டக் கூட்டத்தொடரில் வெளியிடப்பட்ட சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் 1,000 முக்கிய இடங்களில் இலவச வைபை சேவைகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பின்படி, முதற்கட்டமாக சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களான பூங்காக்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் கடற்கரை ஆகிய முக்கிய 500 இடங்களில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் இலவச வைபை வசதி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.