சென்னையில் 44 இடங்களில் இலவச வைபை வசதி..!

சென்னையில் 44 இடங்களில் நேற்று முதல் இலவச வைபை வசதி மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது
இலவச வைபை
கோப்புப்படம்
Published on

சென்னை,

முதலமைச்சரின் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் தலைமைச் செயலகப் பூங்கா பகுதிகளில் 44 இடங்களில் பயன்பாட்டில் இல்லாத இலவச வைபை (WiFi) வசதி 10.08.2026 முதல் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் மக்களுக்கு எளிதாக சேவைகளை வழங்கும் வகையிலும் திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, சென்னையில் மக்கள் அதிகம் வந்து செல்லும் கடற்கரைப் பகுதிகளான மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை மற்றும் தலைமைச் செயலகப் பூங்கா பகுதிகளில் முதற்கட்டமாக மக்கள் தங்குதடையின்றி இணைய பயன்பாட்டினை மேற்கொள்ளும் வகையில் உயர்தரத்தில் இலவச வைபை (WiFi) வசதிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் தலைமைச் செயலகப் பூங்கா பகுதிகளில் 44 இடங்களில் பயன்பாட்டில் இல்லாத இலவச வைபை வசதி 10.08.2026 முதல் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மெரினா கடற்கரைப் பகுதியில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 27 இடங்களிலும், பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதியில் 5 இடங்களிலும், தலைமைச் செயலகப் பூங்காவில் 12 இடங்களிலும் என மொத்தம் 44 இடங்களிலும் 10.08.2026 முதல் இலவச வைபை (WiFi) வசதி மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வைபை வசதியினைப் பயன்படுத்துவதற்கு மக்கள் தங்கள் செல்பேசியில் வைபையினை ஆன் செய்து அதனை கிளிக் செய்தவுடன் வரும் QR Codeனை மீண்டும் கிளிக் செய்தவுடன், செல்பேசி எண்ணிற்கு வரும் OTP எண்ணை இதில் பதிவு செய்தவுடன் வைபை இணைப்பு ஏற்படும். மக்கள் இதனை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான இதர கடற்கரைப் பகுதிகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் பயன்பாட்டில் இல்லாத வைபை வசதியினை மீண்டும் பயன்பாட்டிக்குக் கொண்டு வருதல் மற்றும் புதிதாக வைபை (WiFi) வசதியினை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com