சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் விஜய் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளின் 137-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் விஜய் மரியாதை
Published on

சென்னை,

சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளின் 137-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று சென்னையில் அவரது திருவுருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

சுதந்திரப் போராட்ட வீராங்கனை

சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் கடலூர் முதுநகரில் அம்மாக்கண்ணு - முத்துமணி தம்பதியருக்கு மகளாக 1890-ம் ஆண்டு பிறந்தார். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றார். இவர் சிறுவயது முதல் சுதந்திரப்பற்று மிக்கவராகத் திகழ்ந்தார். 1921-ம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியபோது அதில் கலந்துகொண்டு தனது பொது வாழ்க்கையைத் தொடங்கினார்.

சிறைத் தண்டனை

அஞ்சலை அம்மாள், நீல் சிலை அகற்றும் போராட்டம், சட்டமறுப்பு மறியல் போராட்டம், தனிநபர் சத்தியாகிரக போராட்டம், அந்நியத்துணி புறக்கணிப்புப் போராட்டம், நெசவாளர்கள் போராட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார்.

கருவுற்ற நிலையில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளை, ஆங்கிலேய அரசு பரோல் எனப்படும் சிறை விடுப்பில் மகப்பேறுக்காக வெளியில் அனுப்பி குழந்தை பெற்ற பின்னர், அவரை மீண்டும் சிறையில் அடைத்தது.

நீல் சிலையை அகற்றும் போராட்டத்தில் தனது மகள் லீலாவதியை ஈடுபடுத்தியதால், அஞ்சலை அம்மாளின் மகளுக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தந்தை பெரியார் சென்னை மாகாண காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தபோது கடலூர் வீதிகளில் கதர்த்துணி அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பரப்புரை செய்த நிகழ்வில், அஞ்சலை அம்மாளும் பங்கேற்று, கதர்த்துணி மூட்டைகளைத் தலையில் சுமந்து சென்று விற்பனை செய்தார்.

சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் விடுதலைப் போராட்டத்திற்காக தனது குடும்பச் சொத்துகளையும், குடியிருந்த வீட்டையும் விற்று, நாட்டிற்காகத் தியாகம் செய்தார். தேச விடுதலை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்டார். இவரது குடும்பம் பல நாட்கள் வறுமையில் வாழ்ந்தாலும், எந்தச் சூழ்நிலையிலும் தேச நலனையே பெரும் மூச்சாகக் கொண்டு விடுதலைக்காகப் போராடியது.

தென்னாட்டின் ஜான்சி ராணி

மகாத்மா காந்தியடிகள் கடலூருக்கு வந்தபோது அவரைச் சந்திப்பதற்கு அஞ்சலை அம்மாளுக்கு ஆங்கில அரசு தடை விதித்தது. ஆனால், அஞ்சலை அம்மாள் அத்தடையை மீறி பர்தா அணிந்து காந்தியடிகளை அழைத்துச் சென்றார். அதனால் அஞ்சலை அம்மாள் "தென்னாட்டின் ஜான்சி ராணி” என மகாத்மா காந்தியடிகளால் அழைக்கப்பட்டார்.

சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் 1937, 1946 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக கடலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தனது வாழ்நாள் முழுவதும் நாட்டின் நலனிற்காகத் தியாக வாழ்க்கை மேற்கொண்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளின் வாழ்வு என்றென்றும் போற்றுதலுக்குரியதாகும்.

முதல்-அமைச்சர் மரியாதை

இந்த நிலையில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளின் 137-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் அவரது திருவுருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com